
உத்தரபிரதேச மாநில கிராமம் ஒன்றில் மொபைலில் பேசியபடி தெருவில் நடந்து செல்லும் பெண்களுக்கு 21,000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பசுக்களை பாதுகாக்க ஆம்புலன்ஸ் திட்டம தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள மடோரா கிராமத்தில் பெண்கள் மொபைல் போனில் பேசிய படி தெருவில் நடந்து சென்றால் அபராதம் விதிக்கப்படும் என, பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் மொபைலில் பேசியபடி செல்லும் பெண்களுக்கு 21,000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாயத்தார் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று பசுக்களை திருடுபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும், சாராயம் விற்பனை செய்தால் 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்க மடோரா கிராம பஞ்சாயித்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தவறுகள் குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு தகவல் தருவோருக்கு 51,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் குற்றங்கள் குறையும் என்றும் இதனை கண்காணிக்க 5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
குற்றங்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களின் சொத்துக்களை விற்று அபராதம் தொகை வசூலிக்கப்படும் எனவும் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.