பர்வதம்மாள் மறைவு - சித்தராமையா, தேவகவுடா நேரில் அஞ்சலி..!!!

First Published Jun 1, 2017, 10:28 AM IST
Highlights
siddharamiah dewegowda pays homage to pravdhammal


உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் நடிகர் ராஜ்குமார். இவர் கடந்த 2006–ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவருடைய மனைவி பார்வதம்மா ராஜ்குமார்.

இவர் கன்னட சினிமா தயாரிப்பாளராகவும் இருந்தார். சுமார் 85 படங்களை தயாரித்து உள்ளார். பார்வதம்மா தயாரித்த ‘ஹாலு ஜேனு‘, ‘திரிமூர்த்தி‘, ‘கவிரத்னா காளிதாசா‘ ‘ஜீவன சைத்ர‘ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருடைய உடல்நிலை மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து, செயற்கை சுவாச கருவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

இதில் அவருடைய உடல்நிலை ஓரளவுக்கு தேறியது. நாளுக்குள் நாள் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வந்தது. அவர் எப்படியும் முழுமையாக குணம் அடைந்துவிடுவார் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பார்வதம்மா ராஜ்குமாரின் உடல்நிலை சற்று மோசம் அடைந்தது. ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு இவை அனைத்தும் படிப்படியாக குறைய தொடங்கின.

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் நள்ளிரவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மரணம் அடைந்தார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிகாலை 4.40 மணிக்கு அந்த மருத்துவமனை வெளியிட்டது.

நடிகர் ராஜ்குமார் பார்வதம்மா ராஜ்குமார் தம்பதிக்கு சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் சிவராஜ்குமார் மற்றும் புனித்ராஜ்குமார் ஆகிய இருவரும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். பூர்ணிமா, லட்சுமி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இவர் இதுவரை ரக்ஷிதா, மாலாஸ்ரீ, ரம்யா, சரிதா, ஜெயப்பிரதா, மாதவி, அம்பிகா, சுதாராணி உள்ளிட்ட நடிகைகளை கன்னட திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதற்கிடையே பார்வதம்மா ராஜ்குமாரின் உடல் நேற்று காலை 6 மணிக்கு சதாசிவநகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்–மந்திரி சித்தராமையா, மந்திரிகள் பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார், ஆஞ்சனேயா, எம்.பி.பட்டீல், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மத்திய மந்திரி அனந்தகுமார், பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜனதா மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா, மேயர் பத்மாவதி உள்பட தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் அம்பரீஷ், துவராகநாத், நடிகைகள் சரோஜாதேவி, ஜெயந்தி, கர்நாடக சினிமா வர்த்தகசபை தலைவர் சா.ரா.கோவிந்து, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், முனிரத்னா எம்.எல்.ஏ. உள்பட கன்னட திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் வந்து பார்வதம்மா ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

அதைத்தொடர்ந்து மதியம் 3.30 மணியளவில் அவருடைய உடல் கண்ணாடியில் மூடப்பட்டு வாகனத்தில் ஊர்வலமாக கன்டீரவா ஸ்டூடியோவுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு ராஜ்குமாரின் சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்குகளை இளைய மகன் புனித் ராஜ்குமார் செய்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் ராஜ்குமாரை போல் பார்வதம்மா ராஜ்குமாரின் கண்களும் அவருடைய விருப்பப்படியே தானம் செய்யப்பட்டன.

click me!