
காவிரியில் 24 டி.எம்.சி.க்குக் குறைவாக நீர் இருப்பு இருந்தால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என சித்த ராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அக்டோபர் 7 ம் தேதி முதல் அக்டோபர் 18ம் தேதி வரை நாள்தோறும் 2000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது.
மேலும், தமிழகம் மற்றும் கர்நடக அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்ய மத்திய நீர்வள ஆணைய தலைவர் தலைமையில் குழுவை அமைக்க வேண்டும்.
இந்த குழு ஆய்வு செய்து 17ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், காவிரி வழக்கு விசாரணையை அக் 18ம் தேதிக்குஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்தநிலையில், பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா கூறியதாவது,
காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக விவசாயிகள், பொதுமக்களின் குடிநீர்த் தேவையை கருத்தில் கொண்டு தற்போது கே.ஆர்.எஸ், கபினி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காவிரிப் படுகையில் உள்ள பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய 24 டி.எம்.சி. நீர் இருப்பு தேவையுள்ளது.
எனவே, காவிரியில் 24 டி.எம்.சி.க்குக் குறைவாக நீர் இருப்பு இருந்தால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மாட்டோம். இதனைத் தொடர்ந்து, எந்த நீதிமன்றம் உத்தரவிட்டாலும், காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட முடியாது. இதனால் ஏற்படும் பின்விளைவுகளைச் சந்திக்க கர்நாடக அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.