
பிறந்த நாள் விழாவில் சிறுமி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜியின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் சமரின், மகன் சோஹலின் பிறந்தநாளை கடந்த 4 ஆம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவிற்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் சென்றுள்ளார். இதனையடுத்து பிறந்தநாள் விழாவை முடித்து வீடு திரும்பிய அந்த சிறுமி, மிக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்றுள்ளார். இதனால் உடனடியாக அந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த சிறுமியின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதில், தன் மகளை குடிக்க வற்புறுத்தியதாகவும், பின் அடையாளம் தெரியாத ஆண்களால் அவர் வீட்டின் முன் இறக்கிவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார் அந்த சிறுமி தனியாக விருந்துக்கு சென்றாரா அல்லது சக நண்பர்கள் உடன் சென்றாரா என விசாரித்து வந்தனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினரின் மகன் சோஹல் தான் தன் நண்பர்களுடன் இணைந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. இதை அடுத்து சோஹலை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்த சிறுமி கற்பழிக்கப்பட்டாரா அல்லது கர்ப்பமாக இருந்தாரா அல்லது காதல் விவகாரத்தில் இருந்தாரா அல்லது நோய் வாய்ப்பட்டிருந்தாரா என்பதை எப்படி அறிவது? அது காதல் என்று குடும்பத்தினருக்கும் தெரியும். ஒரு ஜோடி உறவில் இருந்தால், நான் அவர்களை எப்படி நிறுத்துவது? லவ் ஜிஹாத் என்ற பெயரில் நான் அதை செய்ய இது உ.பி அல்ல. சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியின் உடலை எரித்து இறுதிச் சடங்குகளைச் செய்தீர்கள். நான் ஒரு சாமானியனாக பேசுகிறேன். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா அல்லது கர்ப்பமாக இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது உள்ளிட்ட ஆதாரங்களை காவல்துறை எங்கிருந்து பெறுவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.