சரத் பவார், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்: அமித் ஷா தலையிட வலியுறுத்தல்!

By Manikanda PrabuFirst Published Jun 9, 2023, 4:58 PM IST
Highlights

சரத் பவார், சஞ்சய் ராவத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்த பாஜக - சிவசேன ஆகிய கட்சிகள் இடையே ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டபோது, சரத் பவார் தலையீட்டின் பேரில், எதிரெதிர் துருவங்களான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தமது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து  மகா விகாஸ் அகாடி எனும் கூட்டணியை அமைத்தார்.

இதனிடையே, உட்கட்சி பிரச்சினை காரணமாக சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதல்வரானார். சிவசேனா கட்சியும் அவர் வசம் சென்றுள்ளது. தற்போது உத்தவ் தாக்கரே அணியினர் (சிவசேனா - உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணி - UBT)  என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர்.

மகராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவைத் தொகுதிகளும், 288 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளதால், எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் இம்மாநிலத்தின் மீது அரசியல் கட்சிகளின் பார்வை விழுந்துள்ளது. அதேசமயம், பாஜகவை மத்தியில் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதில், மூத்த அரசியல் தலைவரான சரத் பவாரின் பங்கு கணிசமாக உள்ளது.

இந்த நிலையில், சரத் பவார் மற்றும் சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் சஞ்சய் ராவத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டாக்டர் நரேந்திர தபோல்கருக்கு (ஆகஸ்ட் 2013ஆம் ஆண்டில் புனேயில் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர்) ஏற்பட்ட கதியை சந்திக்க நேரிடும் என்று ட்விட்டர் செய்தி மூலம் சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது மகளும், அக்கட்சியின் எம்.பி.யுமான சுப்ரியா சுலே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சரத் பவாருக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “எனது வாட்ஸ் சரத் பவாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற மலிவான அரசியல் நிறுத்தப்பட வேண்டும். சரத் பவாரின் பாதுகாப்பு பொறுப்பு உள்துறை அமைச்சகத்திடம் இருக்கிறது. இந்த விவாகாரத்தில் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரும் உடனடியாக தலையிட வேண்டும்.” என்று சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

அதேபோல், உத்தவ் தாக்கரே பிரிவு எம்பி சஞ்சய் ராவத்துக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷனருக்கும், மாநில உள்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரரும் எம்.எல்.ஏ.வுமான சுனில் ராவத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை மாற்றம்? பாஜகவின் அதிரடி திட்டம்!

கொலை மிரட்டல் குறித்து பேசிய சரத் பவார், “நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சாசனத்தின்படி எந்தக் கட்சி மீதும் தனது கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மிரட்டல் மூலம் குரலை ஒடுக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அது தவறான புரிதல். சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, அதனால் நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத் பவார் அதுமுதலே அக்கட்சியின் தலைவராக உள்ளார். இதனிடையே, அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கும்,  சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித் பவாருக்கும் இடையே கட்சியை கைப்பற்றுவதில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸின் 53 எம்.எல்.ஏ.க்களில் 40 பேரை பிரித்துக் கொண்டு அஜித் பவார் பாஜகவுக்கு ஆதரவளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் தேசியவாத காங்கிரஸ் உடையும் சூழல் ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சரத் பவார் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். தொடர்ந்து சரத் பவார், அஜித் பவாருக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதனடிப்படையில் பாஜகவில் இணையும் முடிவை அஜித் பவார் கைவிட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, தனது ராஜினாமா முடிவை சரத் பவார் கைவிட்டு அக்கட்சியின் தலைவராக மீண்டும் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!