
தனக்கு உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்த பதிவு அரசின் நிர்வாக வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியனா மாநிலத்தில் 28 வயதான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், உயரதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். இது குறித்து தனது பேஸ்புக்
பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், எனக்கு வரும் பைல்களில் தவறுகள் இடம் பெற்றிருந்தால் அதை அடிக்கோடிட்டு என்னென்ன தவறு உள்ளது என்பதை எழுதி ஊழியர்களுக்கு திருப்பி அனுப்புவேன்.
இது தொடர்பாக ஊழியர்கள் சிலர் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த அதிகாரி என்னை அவரது அறைக்கு அழைத்து மிரட்டல்
விடுத்தார்.
கடந்த 6 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தனது அறைக்கு அழைத்த உயரதிகாரி, 7.39 மணி வரை அங்கேயே அமர வைத்தார். அவருக்கு எதிரே நான் அமர்ந்திருந்தேன். உடனே, தனது அருகில் வந்து அமரும்படி கூறினார்.
எப்படி வேலை செய்ய வேண்டும் என்று கணினியில் காண்பிப்பதுபோல் என் அருகில் நெருங்கி தொட்டுத்தொட்டுப் பேசினார். அலுவலகத்தில் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மோசமான வார்த்தைகளால் சொன்னார். அவரது பாலியல் தொல்லை அதிகரித்ததால், இதை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது என்று பேஸ்புக்கில் அவர் கூறியுள்ளார்.
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் இந்த பேஸ்புக் பதிவு தொடர்பாக பெண்கள் அமைப்பு மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அரசின் நிர்வாக வட்டாரத்திலும் அவரது பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட உயரதிகாரியிடம் கேட்டபோது, அதனை முற்றிலும் மறுத்துள்ளார்.