
தொழிலதிபர்களிடம் பணம் பறிக்க முயற்சித்த வழக்கில் ”ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்ஃபோன்” நிறுவனர் மோஹித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.
நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.251க்கு ஸ்மார்ட் போன் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என அறிவித்தது. இந்த போன் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே 30,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர். 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் விற்பது சாத்தியமற்றது எனவும் இது மக்களை ஏமாற்றும் வேலை எனவும் பல்வேறு வழக்குகள் இந்த நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணைக்கு பின்னர் அந்த நிறுவனம் மூடப்பட்டது.
இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தை சார்ந்த பெண் ஒருவர், ஒரு விழாவுக்காக ஹோட்டல் ஒன்றுக்கு சென்றபோது, தன்னை 5 தொழிலதிபர்கள் இணைந்து கூட்டு வன்புணர்வு செய்ததாக புகார் அளித்தார். பெண்ணின் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த விசாரணையில் அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது. தன்னை கூட்டு வன்புணர்வு செய்ததாக புகார் கொடுத்த பெண், 5 தொழிலதிபர்களிடமும் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது.
5 பேரின் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற ரூ.11 கோடி கேட்டு அந்த பெண் மிரட்டியுள்ளார். ரூ.11 கோடியை தர முடியாது என அந்த தொழிலதிபர்கள் கூறியதும், ரூ.2.5 கோடி வரை பேரம் பேசியதாகவும் ஏற்கெனவே ரூ.1.15 கோடியை பெற்று விட்டதாகவும் 5 பேரில் ஒரு தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மீதி பணத்தை பெறுவதற்காக அந்த பெண், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனர் மோஹித் கோயல் மற்றும் அவர்களின் நண்பர் ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு ஓட்டல் ஒன்றுக்கு வந்துள்ளனர். இதையறிந்த போலீசார், சம்பவ இடத்திலேயே அவர்களை மடக்கிப் பிடித்து மூவரையும் கைது செய்தனர்.