
மேற்கு வங்காளத்தில் ரெயிலில் தொங்கியபடி செல்பி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழந்த பரிதாப சம்பவம் நேரிட்டு உள்ளது.
கொல்கத்தாவின் தும்தும் பகுதியை சேர்ந்த இளைஞர் தாராகாந்த் மாகால் தன்னுடைய நண்பர்கள் சுமித்குமார், சஞ்ஜீவ், காஜல் ஷாகா மற்றும் சந்தானுடன் தாராகேஷ்வர் கோவிலுக்கு சென்றுவிட்டு ரெயிலில் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
ரெயிலில் சென்றபோது ரெயிலுக்கு வெளியே தொங்கிய வண்ணம் செல்பி எடுக்கும் விபரீத முயற்சியை அவர்கள் எடுத்து உள்ளனர். ரெயில் ஹவுரா அருகே பேலூர் ரெயில் நிலையம் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது பெட்டியில் மக்கள் கூட்டம் எதுவும் கிடையாது. தாராகாந்த் நண்பர்களுடன் செல்பி எடுக்க முயற்சி செய்து உள்ளார், அப்போது அவருடைய கால் தவறிவிட்டது.
உடனடியாக ரெயிலில் இருந்து விழுந்துவிட்டார். உடனடியாக அவரை காப்பாற்றும் முயற்சியாக பிற நண்பர்களும் ஒருவர் பின் ஒருவர் ரெயிலில் இருந்து கிழே குதித்து உள்ளனர். நண்பரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கிழே குதித்த அவர்கள் எதிர்புறத்தில் வந்த மற்றொரு ரெயிலை கவனிக்க தவறிவிட்டார்கள்.
அந்த ரெயில் அவர்கள் மீது ஏறிவிட்டது. இதானல் தாராகாந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவத்தினை நேரில் பார்த்தவர் பேசுகையில், “போதிய வெளிச்சம் இல்லாதா காரணத்தினால் 4 நண்பர்களும் எதிர்புறமாக வந்த ரெயிலை கவனிக்க தவறிவிட்டார்கள்.
தாராகாந்த் விழுந்ததும் இவர்களும் குதித்து அவரை காப்பாற்ற அவரை நோக்கி ஓடினார்கள், அப்போதுதான் மறுபுறம் வந்த ரெயில் அவர்கள் மீது ஏறிவிட்டது,” என்றார். இச்சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் செல்பி எடுக்க முயன்று உயிரிழப்போர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மற்ற நாடுகளை விட அதிகமான செல்பி உயிரிழப்பு இந்தியாவிலேயே உள்ளது என ஆய்வு அறிக்கை காட்டுகிறது.