இந்தியாவில் கொரோனாவிற்கு 2வது போலீஸ் ஆஃபிஸர் பலி.. தொடரும் சோகம்

By karthikeyan VFirst Published Apr 19, 2020, 4:33 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனாவிற்கு 2வது காவல்துறை அதிகாரி பலியாகியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை நெருங்கிவிட்ட நிலையில், இறப்பு எண்ணிக்கை 507ஆக அதிகரித்துள்ளது. 

கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கொரோனாவிற்கு எதிராக மருத்துவ ரீதியாக போராடிவரும் நிலையில், காவல்துறையினர் களத்தில் இறங்கி ஊரடங்கை உறுதி செய்துவருகின்றனர்.

கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலிலும் கூட காவல்துறையினர், களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி கொண்டிருக்கின்றனர். தேசியளவில் அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையினரின் சிறப்பான பணி மக்களால் பாராட்டப்படுகிறது.

களத்தில் இறங்கி பணி செய்வதால் காவல்துறையினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அந்தவகையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் துணை ஆணையராக இருந்த அனில் கோலி, கொரோனாவால் நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில், மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் ஜூனி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேவேந்தர்குமார் என்ற காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தனிமை வார்டில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்த காவல்துறையினர் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரு எஸ்.ஐக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.  

click me!