
டில்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசு அதிகரித்து டில்லி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.
இதனால், டில்லி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவதிப்படுகின்றனர்.
காற்று மாசு காரணமாக கடந்த புதன்கிழமை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. டில்லியில் வாகனங்களை இயக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கார் பார்க்கிங்களில் 4 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை டில்லி அரசு எடுத்துவருகிறது.
அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள விவசாய கழிவுகளை எரிப்பதால் கிளம்பும் புகையே டில்லி காற்று மாசுபாட்டிற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், குவைத், ஈரான், சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தூசியுடன் வரும் காற்றும் காரணம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
டில்லி காற்று மாசுபாடு குறித்து கூறிய விஞ்ஞானிகள், இதே காலகட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வளிமண்டல மேலடுக்கில் இருந்து, வலிமையான காற்று இந்தியா நோக்கி வீசும். இந்த காற்றானது பாகிஸ்தானில் நீர்த்துளிகளையும், பஞ்சாபில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளில் இருந்து புகையையும் எடுத்து கொண்டு மிக கனமானதாக வட இந்தியாவில் நுழைகிறது. இது டில்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை நச்சுத்தன்மை கொண்ட பகுதியாக மாற்றுகிறது.
இதுதான் டில்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இரவில் வெப்பநிலை குறைந்து, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், நகரம் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் தோற்றமளிக்கிறது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.