வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட தாமதம் ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

By Manikanda Prabu  |  First Published May 17, 2024, 9:25 PM IST

வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட தாமதமாவது ஏன் என்பது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 


நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே, தேர்தல் ஆணையம் அளித்த வாக்குப்பதிவு புள்ளி விவரங்களில் முரண்கள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதனிடையே, வாக்குப்பதிவு முடிந்து 48 மணி நேரத்திற்குள் பதிவான வாக்கு விகிதங்களை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், முதற் கட்டத் தேர்தல் தொடங்கி அதிக தாமதத்துடனும் வழக்கத்திற்கு மாறான பல்வேறு திருத்தங்களுடன் வாக்குப்பதிவுத் தரவுகள் வெளியிடப்படுவது அச்சத்தை எழுப்பியுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

மேலும், வாக்குச் சாவடி வாரியாகவும் தொகுதிகள் வாரியாகவும் வாக்குப்பதிவு தரவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவும் தங்களது மனுவில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மனு குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

முன்னதாக, முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதி வாக்குபதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டது. முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை 4 நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், தேர்தல் நடந்து முடிந்த அன்று வெளியான சதவீதத்துக்கும், நீண்ட தாமதத்துக்கு பிறகு வெளியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் சில முரண்பாடுகள் இருந்தன.

மும்பை விளம்பர பலகை விபத்து எதிரொலி: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்!

அதாவது, 19.04.2024 அன்று மாலை 7 மணி நிலவரப்படி முதற்கட்ட வாக்குப் பதிவில் (102 இடங்கள்) பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவீதம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. அதேபோல், இரண்டாம் கட்டத்தில் (88 இடங்கள்) மதிப்பிடப்பட்ட வாக்குப்பதிவு சுமார் 60.96 சதவீதமாக இருந்தது.

ஆனால், இவ்விரு தேர்தல்களுக்கு மறுநாளான, 20.04.2024 அன்று தேர்தல் ஆணையத்தால் கணிக்கப்பட்ட முதல் கட்ட வாக்குப்பதிவு 65.5% ஆகவும், 27.04.2024 அன்று கணிக்கப்பட்ட இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான சதவிகிதம் 66.7 சதவீதமாகவும் இல்லை. இறுதியாக, 30.04.2024 அன்று, தேர்தல் ஆணையம் அளித்த புள்ளிவிவரங்களின்படி, முதல் கட்டத்தில் 66.14 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக உறுதிப்படுத்தப்பட்டது.

வழக்கமாக, வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்ட நிலையில், திடீரென ஏற்பட்டுள்ள இந்த தாமதமும், அதிலிருக்கும் முரண்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த தாமதத்தை நியாயப்படுத்துவதற்கான எந்த விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!