
தாஜ்மஹாலுக்கு மிக அருகே கட்டப்படும் பார்க்கிங் கட்டிடத்தைத் தகர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச அரசு அண்மையில் வெளியிட்ட புதிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் தாஜ்மஹால் இடம்பெறவில்லை. உலக அதிசயமாக போற்றப்படும் தாஜ்மஹாலை சுற்றுலாத்தலம் இல்லை என்பது இந்தியாவுக்கே அவமானம் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரித்தனர்.
இச்சூழலில், இந்தியாவின் மீது படையெடுத்த முகலாய துரோகிகள் தாஜ்மஹாலைக் கட்டினார்கள் என்று பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கூறினார். பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமியும் தாஜ்மஹால் ஜெய்ப்பூர் மன்னரிடமிருந்து திருடப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டது என்று கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சர்ச்சையின் விளைவாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத நாளை மறுநாள் ஆக்ரா சென்று தாஜ்மஹாலில் ஆய்வு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தாஜ்மஹால் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பல அடுக்கு பார்க்கிங் கட்டிடத்தை உடனே இடித்துத் தள்ள உச்சநிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக அதிசயமாகத் திகழும் தாஜ்மஹாலின் கிழக்கு நுழைவுவாயிலுக்கு மிக அருகே கட்டப்படும் இந்தக் கட்டிடத்தால் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.