சரவெடிக்கு அதிரடியாக தடை விதித்தது உச்ச நீதிமன்றம்... உத்தரவை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு உத்தரவு.!

By Asianet TamilFirst Published Oct 29, 2021, 10:55 PM IST
Highlights

கொண்டாட்டம் என்ற பெயரில் பட்டாசு வெடித்து அதன் காரணமாக ஏற்படும் காற்று மாசால் ஒருவரின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதை  அனுமதிக்கவே முடியாது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சரவெடியை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசுதான். இந்த ஆண்டு தீபாவளி திருநாள் நவம்பர் 4-ஆம் தேதி வருகிறது. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மோசமாகப் பாதிக்கப்படுகிறது என்றும் காற்று மாசு கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று தொடரப்பட்ட வழக்குக் காரணமாக, ஆபத்தான வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருக்கிறது. பசுமை பட்டாசுகளைத் தயாரிக்கவும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மேலும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நேரக் கட்டுப்பாடும் அமலில் உள்ளது. இதன்படி இந்தியாவில் தீபாவளி திரு நாளன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி வேதி பொருட்களை கொண்டு பட்டாசுகள் தயாரிக்கப்படுவதா ஒரு சாரார் குற்றம் சாட்டி வந்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கவும் தயாரித்து விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே தீபாவளி  திருநாளன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம் என்று கட்டுப்பாட்டை நீக்கக் கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கமும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த இரு வழக்குகளையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பாக உத்தரவைப் பிறப்பித்தது. “சரவெடியை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. வேதிப் பொருட்களை கொண்டு பட்டாசுகளை தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்படுகிறது. பட்டாசு வெடிப்பதையே நாங்கள் முழுமையாக தடை செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். தடைசெய்யப்பட்ட பேரியம், பேரியம் நைட்ரேட் உட்பட உடலுக்கும் தீங்கு விளைவிக்கும்  வேதிப்பொருட்களை பட்டாசு தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. அதுபோன்ற பட்டாசுகள் தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட வேதிப்பொருள்களை கொண்டு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொண்டாட்டம் என்ற பெயரில் பட்டாசு வெடித்து அதன் காரணமாக ஏற்படும் காற்று மாசால் ஒருவரின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதை  அனுமதிக்கவே முடியாது. இந்த விஷயத்தில் எந்த விதி மீறல் கண்டறியப்பட்டாலும் அரசுகள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலத்தில் நீதிமன்றம் பிறப்பித்த பல உத்தரவுகள் மீறப்பட்டன என்பது விசாரணை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு அப்படியான விதி மீறல் எதுவும் நடக்கக் கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதை மாநில அரசு, காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 

click me!