சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் மனைவி வர்ஷா ராவத்துக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பையில் பத்ரா சாவல் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழல் நடந்ததாகவும், அதில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மும்பையில் பத்ரா சாவல் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் மனைவி வர்ஷா ராவத்துக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே ஊழல் வழக்கு தொடர்பாக வர்ஷாவிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
மும்பை கோரேகானில் பத்ரா சாவல் பகுதியில் இருக்கும் பழைய வீடுகளை புதுப்பித்து கொடுப்பது தொடர்பான திட்டத்தில், பண பரிமாற்ற ஊழல் நடந்ததாக சஞ்சய் ராவத் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவரது வீடு மற்றும் அலுவலகங்கில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
sanjay raut: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைதுக்கு காரணம் என்ன? பத்ரா சாவல் நிலமோசடி என்றால் என்ன?
இதே வழக்கில் ஆஜராகுமாறு சஞ்சய் மனைவி வர்ஷாவுக்கும் அமலாக்கத்துறை இன்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. நடப்பாண்டின் துவக்கத்தில் பிஎம்சி வங்கி ஊழல் தொடர்பாக வர்ஷாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது. மாதுரி பிரவீண் ராவத் என்பவரிடம் இருந்து வர்ஷாவின் வங்கி கணக்கிற்கு ரூ. 55 லட்சம் பண பரிவர்த்தனை செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து அப்போது வர்ஷாவிடம் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பி இருந்தது. இந்த பண பரிவர்த்தனைக்கும், பத்ரா சாவல் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்ட ஊழலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாகத்தான் தற்போது வர்ஷாவுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. சஞ்சய் ராவத் விசாரணையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
வழக்கின் பின்னணி:
கடந்த 2007ம் ஆண்டு, மகாராஷ்டிரா வீட்டு வசதி வாரியத்துடன் இணைந்து மும்பையைச் சேர்ந்த குரு ஆஷிஸ் கட்டுமான நிறுவனம் 672 வீடுகள் கட்டித்தர ஒப்பந்தம் செய்து இருந்தது. மும்பை புறநகரான கோரேகான் பகுதியில் பத்ரா சாவல் பகுதியில் 672 வீடுகளை புதுப்பித்து கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. புதிய வீடுகள் கட்டியதுபோக, மீதமுள்ள இடங்களை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விற்கவும் முடிவு செய்யப்பட்டது.
அமலாக்கப்பிரிவு கூற்றுப்படி, சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உறவினர் பிரவின் ராவத், குரு ஆஷிஸ் கட்டுமான நிறுவத்தின் இயக்குநர்களில் ஒருவர். இந்த கட்டுமான நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக இதுவரை ஒரு வீடு கூட கட்டித்தரவில்லை. ஆனால், அந்த இடத்தை கூறுபோட்டு தனியாருக்கு ரூ.901.79 கோடிக்கு விற்பனை செய்தது.
sanjay raut news: பிடி இறுகுகிறது! சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது மும்பை போலீஸார் புதிய வழக்கு
குரு ஆஷிஸ் கட்டுமான நிறுவனம் தி மிடோஸ் என்ற திட்டத்தைத் தொடங்கி வீடு தேவைப்படுவோரிடம் இருந்து ரூ.138 கோடி வசூலித்தது. ஒட்டு மொத்தமாக ரூ.1,039.79 கோடி மோசடி நடந்துள்ளது என்று குற்றம்சாட்டப்படுகிறது
சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உறவினர் பிரவீன் ராவத், தனது கட்டுமான நிறுவனத்துக்கும், மகாராஷ்டிரா வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடியை தனது உறவினர்கள், நண்பர்கள், நெருங்கிய தொழில் அதிபர்கள் வங்கிக்கணக்குகளில் மாற்றியுள்ளார். இதில் சஞ்சய் ராவத்தின் குடும்பத்தினர் வங்கிக் கணக்கிற்கும் பணம் வந்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில், பிரவீன் ராவத்தின் மனைவி மாதுரி ராவத்திடம் இருந்து ரூ.83 லட்சம் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பணத்தின் மூலம் தாதர் பகுதியில் வர்ஷா ராவத் ஒரு வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இதுபோல் பலமுறை பணப்பரிமாற்றங்கள் நடந்து இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்... அதிர்ச்சியில் உத்தவ் தாக்கரே.