
ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு "தி ஃப்ரெட் டேரிங்டன் விருது" வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் வெய்மவுத் நகரில் நடைபெற்ற சாண்ட் வேர்ல்ட் 2025 என்ற சர்வதேச மணல் சிற்பக்கலை விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு சாண்ட் வேர்ல்ட் 2025 சர்வதேச மணல் சிற்பக்கலை விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பல சர்வதேச மணல் கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்டிருக்கும் சுதர்சன் பட்நாயக் உலக அமைதிக்கான செய்தியை வெளிப்படுத்தும் வகையில் 10 அடி உயர விநாயகர் சிலையை மணலில் வடிவமைத்தார்.
புகழ்பெற்ற பிரிட்டிஷ் மணல் சிற்பக் கலைஞர் ஃப்ரெட் டேரிங்டனின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழாவில் அவரது பெயரில் புதிய விருது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க விருது இந்திய மணற்சிற்பக் கலைஞருக்கு முதலாவதாக வழங்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்ற சுதர்சன் பட்நாயக் இதுவரை உலகம் முழுவதும் 65க்கும் மேற்பட்ட சர்வதேச மணல் சிற்பக்கலை சாம்பியன்ஷிப் மற்றும் திருவிழாக்களில் பங்கேற்றுள்ளார்.
வெய்மவுத் நகர மேயர் ஜான் ஓ'ரெல் சுதர்சன் பட்நாயக்கிற்கு இந்த விருதையும் பதக்கத்தையும் வழங்கினார். இந்த நிகழ்வில் சாண்ட் வேர்ல்ட் இயக்குநர் மார்க் ஆண்டர்சன் மற்றும் இணை நிறுவனர் டேவிட் ஹிக்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் கலாச்சார அமைச்சர் நௌரேம் ஜெ. சிங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
விருது பெற்றது பற்றி சுதர்சன் பட்நாயக் கூறுகையில், "2025ல் இந்த விருதைப் பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியான நாள். ஒரு கலைஞனாக இது எனக்கு மிகவும் முக்கியமானது. இந்த விருதை எனது ரசிகர்கள் மற்றும் என்னை எப்போதும் ஊக்குவித்த அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்." என்றார்.