
சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) மொபைல் செயலியை செல்போன்களில் நிறுவுவதும், செயல்படுத்துவதும் கட்டாயமில்லை என்றும், மற்ற செயலிகளைப் போலவே இதனைப் பயன்படுத்துவதோ அல்லது நீக்குவதோ முழுவதுமாக பயனர்களின் விருப்பத்தைச் சார்ந்தது என்றும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிந்தியா, "சஞ்சார் சாத்தி" செயலி முற்றிலும் தன்னார்வமானது. இதனைப் பதிவிறக்குவதோ அல்லது செயல்படுத்துவதோ கட்டாயம் அல்ல. இந்த செயலியைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் பதிவு செய்யாமல் இருக்கலாம், மேலும், எப்போது வேண்டுமானாலும் இதனை நீக்கிக்கொள்ள முழு உரிமை உண்டு," என்று கூறினார்.
"நீங்கள் அதை செயல்படுத்த விரும்பினால் செய்யுங்கள். இல்லை என்றால் வேண்டாம். நீக்க விரும்பினால் நீக்கலாம். இது முற்றிலும் உங்கள் விருப்பம்," என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த செயலியின் நுகர்வோர் பாதுகாப்பு நன்மைகளைத் தவறான தகவல்கள் மறைத்துவிடக் கூடாது என்று வலியுறுத்திய அமைச்சர், இந்தத் தளம் 2024 ஆம் ஆண்டில் ரூ.22,800 கோடி வரையிலான நிதி மோசடிகளைத் தடுக்க உதவியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சஞ்சார் சாத்தி என்பது தனிநபர்கள் தங்கள் மொபைல் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செயலி மற்றும் அதனுடன் இணைந்த ஆன்லைன் போர்ட்டல் மூலம், பயனர்கள் ஒரு சாதனத்தின் ஐஎம்இஐ (IMEI) எண் உண்மையானதா என்று சரிபார்க்கலாம், தொலைத்தொடர்பு சேவைகளின் தவறான பயன்பாடு குறித்து புகாரளிக்கலாம், அத்துடன் தங்கள் பெயரில் செயலில் உள்ள மொபைல் இணைப்புகளையும் சரிபார்க்க முடியும்.
சஞ்சார் சாத்தி தளத்தின் செயல்பாட்டு வெற்றியை அமைச்சர் எடுத்துரைத்தார். இதன் மூலம் சந்தேகத்திற்கிடமான அல்லது மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 2.25 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. திருடப்பட்ட 20 லட்சம் சாதனங்களைக் கண்டறிய இந்த அமைப்பு உதவியுள்ளது, அதில் 7.5 லட்சம் போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
சஞ்சார் சாத்தி செயலி மூலம் அரசு மக்களை உளவு பார்ப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் சிந்தியா திட்டவட்டமாக மறுத்தார். இந்தச் செயலியில் உளவு பார்ப்பதற்கோ அல்லது அழைப்புகளைக் கண்காணிப்பதற்கோ எந்த அம்சமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தவும், போலியான ஐஎம்இஐ (IMEI) எண்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் தான் இந்தியாவில் விற்கப்படும் சாதனங்களில் சஞ்சார் சாத்தி செயலியைத் முன்கூட்டியே நிறுவ வேண்டும் (Pre-install) என்று தொலைத்தொடர்புத் துறை (DoT) அறிவுறுத்தியுள்ளது எனவும் எடுத்துரைத்தார்.