
காதலனின் சடலத்துடன் திருமணம் செய்துகொண்ட மகாராஷ்டிரப் பெண், தனது காதலன் கொல்லப்பட்டதற்கு, இரண்டு போலீஸ்காரர்கள் தனது தம்பியைத் தூண்டியதுதான் காரணம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் 20 வயதான சக்ஷம் என்பவர், அவரது காதலி அஞ்சல் மாமிட்வாரின் சகோதரனால் நவம்பர் 27ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இருவரும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள் இருந்த நிலையில், இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலையில், காதலனை இழந்த சகோதரி அஞ்சல் அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சல் மாமிட்வார் (21) பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
"சக்ஷம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அன்று காலை சுமார் 11 அல்லது 12 மணியளவில், என் தம்பி ஹிமேஷ் மாமிட்வார், என்னை இட்வாரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே, சக்ஷத்துக்கு எதிராக ஒரு பொய்ப் புகார் அளிக்குமாறு அவன் என்னிடம் கூறினான்."
"நான் புகார் அளிக்க மறுத்தேன். அப்போது அங்கிருந்த இரண்டு போலீஸ்காரர்கள் தீரஜ் கோமல்வார் மற்றும் மாஹி தசர்வார் இருவரும் என் தம்பி ஹிமேஷைத் தூண்டினர். 'நீ அவனை அடித்துவிட்டு இங்கு வந்தாயா? இதைச் செய்வதற்குப் பதிலாக, உனது சகோதரி தொடர்புடைய நபரை நீயே சமாளித்துக் கொள்வது நல்லது' என்று அவர்கள் கூறினார்கள்."
போலீசார் இப்படிப் பேசியதுதான் தனது சகோதரனை இந்தக் கொடூரச் செயலைச் செய்யத் தூண்டியது என்று அஞ்சல் குற்றம் சாட்டியுள்ளார்.
அஞ்சலும் சக்ஷமும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். ஆனால், சக்ஷம் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர்களது காதலுக்கு அஞ்சலின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், பின்னர் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகக் குடும்பத்தினர் உறுதி அளித்திருந்ததாகவும் அஞ்சல் குறிப்பிட்டுள்ளார்.
சக்ஷமும் அஞ்சலின் சகோதரர்களும் நண்பர்கள் என்பதால், அவர்கள் மூலம் தான் இருவரும் சந்தித்துக் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். நவம்பர் 27 அன்று மாலையில், சக்ஷம் மற்றும் ஹிமேஷ் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஹிமேஷ், சக்ஷத்தைச் சுட்டுக் கொன்றதுடன், அவரது தலையை ஒரு டைல்ஸ் கல்லைக் கொண்டு தாக்கிச் சிதைத்துள்ளார்.
தன் காதலனைக் கொன்றதற்காகச் சகோதரன் ஹிமேஷ் மற்றும் உடந்தையாக இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று அஞ்சல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கொலை தொடர்பாக, போலீஸார் ஹிமேஷ், அஞ்சலின் மற்றொரு சகோதரர் சாஹில் (25) மற்றும் அவர்களது தந்தை கஜனன் மாமிட்வார் (45) ஆகியோரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மூன்று நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.