87 சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகளுக்குத் தடை! மத்திய அரசு அறிவிப்பு!

Published : Dec 01, 2025, 07:07 PM IST
Loan Apps

சுருக்கம்

சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 87 கடன் வழங்கும் செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்தச் செயலிகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக இயங்கி வந்த மொத்தம் 87 கடன் வழங்கும் செயலிகள் (Illegal Loan Lending Applications) முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. முறையான சரிபார்ப்புக்குப் பிறகு இந்தச் செயலிகள் முடக்கப்பட்டன என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

நிறுவன விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்.

சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகள்

"தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69A-இன் கீழ், பொது அணுகலுக்கான தகவல்களைத் தடுப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு (MeitY) அதிகாரம் உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

"உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69A-இன் கீழ், மொத்தமாக 87 சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகளை MeitY முடக்கியுள்ளது," என்று அமைச்சர் மல்ஹோத்ரா கூறினார்.

நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

மேலும், கடன் செயலிகள் மூலம் ஆன்லைன் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் உட்படப் பல நிறுவனங்கள் மீது, நிறுவனங்கள் சட்டம் 2013-இன் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கணக்கு புத்தகங்களை ஆய்வு செய்தல், நேரடி விசாரணை போன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

"மேற்கண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் நிறுவனங்கள் சட்டம் 2013-இன் கீழ் ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால், பொருத்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது," என்றும் அவர் விளக்கினார்.

நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் நிறுவனங்கள் சட்டத்தை அமல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி
மோடி அழுத்தத்திற்கு அடிபணியும் தலைவர் அல்ல, இந்தியா வளர்ந்து வரும் சக்தி - புதின் புகழாரம்