செயிண்ட் கோபெயின் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் 6,000 கோடி முதல் 8,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது
பிரெஞ்சு கிளாஸ் டோர் நிறுவனமான செயிண்ட் கோபெயின் இந்தியாவில் தனது செயல்முறைகளை விரிவுப்படுத்த அடுத்த 2 ஆண்டுகளில் 6,000 கோடி முதல் 8,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. செயின் கோபெயின் நிறுவனம் உலகின் 75 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸை தொடர்ந்து இந்தியா லாபகரமான சந்தையாக உள்ளது.
இந்த நிலையில் சர்வதேச கண்ணாடி தயாரிப்பு மற்றும் கட்டுமான பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான செயிண்ட் கோபெயின் நிறுவனம் 2032-ம் ஆண்டுக்குள் 36,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் இந்தியாவில் தனது செயல்முறைகளை விரிவுப்படுத்த அடுத்த 2 ஆண்டுகளில் 6,000 கோடி முதல் 8,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
இதையும் படிங்க : கோல்டன் குளோப் பந்தயத்தில் இந்திய வரலாற்றை எழுதிய அபிலாஷ் டாமி.. புதிய சாதனை படைத்து அசத்தல்..!
இந்தியா முழுவதும் ராஜஸ்தான் முதல் தமிழ்நாடு வரை 30 இடங்களில் 60 உற்பத்தி நிலையங்களுடன் செயல்படும் அந்நிறுவனம் ஏற்றுமதி மூலம் மட்டும் 14% லாபம் ஈட்டி வருகிறது.
செயிண்ட் கோபெயின் நிறுவனத்தின் இந்தியா மற்றும் ஆசியா பசுபிக் மண்டல தலைமை நிர்வாக அதிகாரி சந்தானம் இதுகுறித்து பேசிய போது “ 6,000 கோடி முதல் 8,000 கோடி முதலீடு 2023 முதல் 2025 வரை மேற்கொள்ளப்படும். பெரும்பாலான முதலீடுகள் மூலதன செலவுகள் மற்றும் அவற்றின் இணைப்புகள் அல்லது கையகப்படுத்துதல் தொடர்பாக இருக்கும்.2002 மற்றும் 2022-க்கு இடையில் எங்கள் நிறுவனம் 11,500 கோடி இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸுக்கு அடுத்தபடியாக இந்திய சந்தை லாபகரமாக உள்ளது. எனவே 2032-க்குள் நாங்கள் 36,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனினும் வருவாய் குறைவாக இருந்தால், அந்த இலக்கை அடைய ஓரிரு ஆண்டுகள் அதிகமாகலாம்.” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : சோனியா காந்தியை விஷக்கன்னி என்று விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ.. கர்நாடகாவில் தொடரும் விஷ அரசியல்