இந்திய இறையாண்மைக்காக குரல் கொடுத்த சச்சின்.. கட் அவுட்டில் கருப்பு சாயத்தை ஊற்றி வெறுப்பை கக்கும் காங்கிரஸ்

By karthikeyan VFirst Published Feb 5, 2021, 9:26 PM IST
Highlights

இந்திய இறையாண்மையை காக்கும் விதமாக அந்நிய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் உருவபொம்மை மீது கேரள இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள், கருப்பு ஆயிலை ஊற்றி எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.
 

மத்திய அரசு கொண்டுவர முனையும் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் 2 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியும், அப்போது வெடித்த வன்முறையும், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. 

விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் மீது சர்வதேச அரங்கத்தில் கலங்கத்தையும், இந்தியாவின் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் சில அந்நிய சக்திகள் திட்டமிட்டே செயல்பட்டன. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சூழலியல் மற்றும் காலநிலை மாற்ற ஆர்வலரான க்ரெட்டா துன்பெர்க், இந்தியாவிற்கு சர்வதேச அளவில் அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக செயல்பட வேண்டிய செயல் திட்டத்தை டுவிட்டரில் பகிர்ந்து, பின்னர் நீக்கிவிட்டார். எனினும் அதன் ஸ்க்ரீன்ஷாட் வைரலாக பரவி, க்ரெட்டா துன்பெர்க்கின் உண்மை முகம் அம்பலப்பட்டது.

அந்த அந்நிய சக்திகள் உருவாக்கிய டெம்ப்லேட்டைத்தான் அமெரிக்க பாப் பாடகியான ரிஹானாவும் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். இந்தியாவிற்கு எதிரான அந்நிய சக்திகளை கண்டிக்கும் விதமாக பல பிரபலங்கள் டுவீட் செய்திருந்தனர்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். “இந்திய இறையாண்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. அந்நிய சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர பங்கேற்பாளர்களாக இருக்க முடியாது. இந்தியாவை பற்றி இந்தியர்களுக்கு தெரியும். இந்தியாவிற்கானதை இந்தியாவே முடிவு செய்துகொள்ளும். இந்தியர்களாக இணைந்திருப்போம்” என்று சச்சின் பதிவிட்டிருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் விவசாயிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட அந்நிய சக்திகளுக்கு எதிராகத்தான் கருத்து தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியை எம்பிக்கள் சச்சின் மீது வெறுப்புணர்ச்சியை உமிழ்ந்துவருகின்றனர். 

அதன் ஒருபகுதியாக, கேரள இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், சச்சின் டெண்டுல்கரின் உருவபொம்மை மீது கருப்பு ஆயிலை ஊற்றி எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இந்திய இறையாண்மைக்காக குரல் கொடுத்த சச்சின் டெண்டுல்கரை வேண்டுமென்றே டார்கெட் செய்து தாக்குகிறது காங்கிரஸ் கட்சி.
 

click me!