விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் இந்தியாவிற்கு எதிரான அந்நிய சக்திகளின் சதி.! ஆதாரத்துடன் அம்பலம்

By karthikeyan VFirst Published Feb 4, 2021, 8:08 PM IST
Highlights

விவசாயிகள் போராட்டத்தை வைத்து இந்தியா மீது அவதூறு பரப்ப, ஸ்வீடன் சூழலியல் மற்றும் காலநிலை மாற்ற ஆர்வலர் க்ரெட்டா துன்பெர்க் முயன்றது அப்பட்டமாக அம்பலப்பட்டுள்ளது.
 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு கொண்டுவர முயலும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 2 மாதத்திற்கும் மேலாக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி என்ற பெயரில் வன்முறையை கையில் எடுத்த போராட்டக்காரர்கள், தடுப்புகளை தகர்த்து டெல்லிக்குள் நுழைய முயன்றதால் போலீஸ்காரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டு, வன்முறையாக வெடித்தது.

இதையடுத்து இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது போன்ற தோற்றத்தில், சில அந்நிய சக்திகள் இந்தியாவின் மீது அவதூறு பரப்பி, சர்வதேச அரங்கில் இந்தியாவையும் மோடி அரசாங்கத்தையும் தவறாக சித்தரிக்க முயன்ற விஷயம் அப்பட்டமாக அம்பலப்பட்டுள்ளது.

ஸ்வீடனை சேர்ந்த சூழலியல் மற்றும் காலநிலை ஆர்வலரான க்ரெட்டா துன்பெர்க், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக துணை நிற்பதாக ஒரு டுவீட்டை போட்டார். மேலும், இந்தியா மீது சர்வதேச அரங்கில் அழுத்தத்தை அதிகரிக்க, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற செயல் திட்டத்தையும் “ToolKit" என்ற பெயரில் ஒரு டுவீட் போட்டார். பின்னர் அந்த டுவீட் நீக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் அதன் ஸ்க்ரீன்ஷாட்டும், அதில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்தியாவுக்கும் எதிராக தீட்டப்பட்டுள்ள திட்டங்கள், பகீர் ரகம்.

இந்தியாவிற்கு எதிரான அந்த செயல் திட்டத்தில், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று இந்திய தூதரகங்கள், அரசு அலுவலகங்கள், மீடியா அலுவலகங்கள் மற்றும் மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த அத்துமீறல்கள், வன்முறைகள் அனைத்துமே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டவை தான் என்பது நிரூபணமாகிறது. அந்த வன்முறை சம்பவங்கள், ஏதோ எதேச்சையாக நடந்தவையல்ல.

குடியரசு தின வன்முறைக்கு பிறகு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற திட்டங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பிப்ரவரி 4(இன்று) மற்றும் 5(நாளை) ஆகிய தேதிகளில் டுவிட்டரில் இந்திய அரசுக்கு எதிரான ஒரு இயக்கத்தை முன்னெடுத்து டிரெண்ட் செய்யவும், பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இந்திய தூதரகங்கள், அரசு அலுவலகங்கள், மீடியா அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, தங்களுக்கு(சதிகார கூட்டம்) scrapfarmacts@gmail.com  என்ற மெயிலுக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அரசு மீது சர்வதேச அளவில் அழுத்தத்தை அதிகரிக்க, டெம்ப்லேட் வாசகங்கள் உருவாக்கப்பட்டு, இந்தியாவிற்கு எதிராக செயல்பட விரும்புபவர்களால் அது பகிரப்பட்டது. அப்படி பகிரப்பட்ட வாசகம் தான், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா பகிர்ந்த ”நாம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை” என்ற விவசாயிகளுக்கு ஆதரவாக பகிரப்பட்ட வாசகம்.

ஐ.நா சபையில், ஜனநாயகத்தின் குரல்வளை இந்தியாவில் நெறிக்கப்படுவதாக புகார் அளிக்கவும், பிரிட்டிஷ் எம்பிக்களிடம், இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்துமாறு புகார் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டு, அதற்கான வழிமுறைகளும் பகிரப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கும், போராட்ட வழிமுறைகள் குறித்து தெரிந்துகொள்வதற்கும், இந்தியாவிற்கு எதிராக இயங்கும் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாக இந்தியாவில் சூழலியல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இயங்குபவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இவையனைத்தும், இந்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடத்தப்படுவது அந்நிய சக்திகளின் தூண்டுதலின் பெயரில் விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் விவசாயிகளை தவறாக வழிநடத்தி நடத்துபவைதான் என்பது நிரூபணமாகியுள்ளது.
 

click me!