இஸ்ரோவின் புதிய தலைவர் நியமனம்.. சந்திராயன் 2 திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்..இவரை பற்றிய சில தகவல்கள்..

By Thanalakshmi VFirst Published Jan 12, 2022, 7:38 PM IST
Highlights

இஸ்ரோவின் புதிய தலைவராக எஸ்.சோம்நாத் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சந்திராயன் - 2 விண்கலம் தரையிறங்குவதற்கான தொழில்நுட்பத்தை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.  
 

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விண்வெளி ஆய்வாளர் எஸ்.சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் விண்வெளித்துறையில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக இருக்கும் கே.சிவனின் பதவிக் காலம் வரும் ஜனவரி 14 அன்று முடிவடையவுள்ளது. இவரின் பதவிக் காலம் முடிந்துள்ளதை அடுத்து தற்போது புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி எஸ்.சோம்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு சோம்நாத் இஸ்ரோ தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (விஎஸ்எஸ்சி) தற்போதைய இயக்குநராக இருக்கும் சோம்நாத், கேரளாவைச் சேர்ந்தவர். கொல்லம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ள சோம்நாத், இந்தியன் இன்ஸ்டிடியூட் சயின்ஸில் முதுகலையாக விண்வெளிப் படிப்பை முடித்துள்ளார். "structures, dynamics and control" பிரிவில் நிபுணத்துவம் கொண்ட இவர், 1985-ல் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இணைந்துள்ளார்.

ஆரம்பக் கட்டங்களில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்புக்கான குழுத் தலைவராக இருந்தவர், பின்னாளில் பிஎஸ்எல்வி திட்ட மேலாளராக உயர்ந்து, பிஎஸ்எல்வி திட்டத்தின் வழிமுறைகள், பைரோ அமைப்புகள், ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கண்காணித்து வந்ததுடன் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். ராக்கெட் எஞ்சின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவரான சோமநாத் சந்திராயன் - 2 விண்கலம் தரையிறங்குவதற்கான தொழில்நுட்பத்தை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். 

அதேபோல் GSLV Mk-III ஏவுகணை திட்டத்தின் வளர்ச்சியில் இவர் முக்கியப் பங்கும் வகித்துள்ளார். ஜிசாட்-9 மிஷனில் மின்சார உந்துவிசை அமைப்பை முதன்முறையாக வெற்றிகரமாகப் பறக்கவிட்டது போன்றவை இவரின் சாதனைகளில் முக்கியமானவை. இவரின் நியமனத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

S Somanath appointed as the new Secretary, Department of Space and Chairman, Space Commission
pic.twitter.com/TpzGvFUrV0

— All India Radio News (@airnewsalerts)
click me!