திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 பேரும், பாஜக வேட்பாளர்கள் 5 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட 11 தலைவர்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆளும் பாஜக அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், புதிய உறுப்பினர்கள் இணைவதன் மூலம் அக்கட்சியின் பலம் 93 ஆக அதிகரிக்கும்.
மேற்கு வங்கத்தில் 6 இடங்களுக்கும், குஜராத்தில் 3 இடங்களுக்கும், கோவாவில் ஒரு இடத்துக்கும் ஜூலை 24ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறப்போவதில்லை. ஏனெனில் இந்தத் தொகுதிகளில் எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் என யாரும் இல்லை. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற அளிக்கப்பட்ட அவகாசமும் இன்றுடன் முடிகிறது.
எனவே 6 திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களும், ஐந்து பாஜக வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். முன்னதாக மேற்கு வங்கத்தில் மாநிலங்களவைத் தொகுதி ஒன்றில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
பிளாட்பாரத்தில் தூங்கிய சிறுவனை பூட்ஸ் காலால் உதைத்து எழுப்பிய ரயில்வே போலீஸ்!
மாநிலங்களவைக்கு இரண்டாவது முறையாகத் தேர்வு பெறும் எஸ் ஜெய்சங்கருடன் குஜராத்தில் இருந்து பாபுபாய் தேசாய் மற்றும் கேசரிதேவ் சிங் ஜாலா, மேற்கு வங்கத்தில் இருந்து அனந்த் மகாராஜ், கோவாவில் இருந்து சதானந்த் ஷெட் தனவாடே ஆகியோரும் பாஜக வேட்பாளர்களாக உள்ளனர். இவர்கள் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.க்களாக ஆக உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையனைத் தவிர, சுகேந்து சேகர் ராய், டோலா சென், சாகேத் கோகலே, சமுருல் இஸ்லாம் மற்றும் பிரகாஷ் பாரிக் ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை இழக்கிறது. இதன் மூலம் அக்கட்சியின் பலம் 30 ஆகக் குறையும். 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் 7 இடங்கள் ஜூலை 24க்குப் பிறகு காலியாகிவிடும். ஜம்மு காஷ்மீரில் நான்கு இடங்கள், இரண்டு பரிந்துரைக்கப்பட்ட இடங்கள் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஒரு இடம் காலியாகும்.
இதனால், மாநிலங்களவையில் மொத்த இடங்கள் 238 ஆக குறையும். பெரும்பான்மை 120 ஆக இருக்கும். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 105 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஐந்து நியமன எம்.பி.க்கள் மற்றும் இரண்டு சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவையும் பாஜக பெற்றுவிடும். எனவே பாஜகவுக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 112 ஆக இருக்கும். இருந்தாலும் ஆளும் கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்க 8 உறுப்பினர்கள் குறையும் நிலையே இருக்கும்.