ஜி20 கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தன்னால் இயலாது என புடின் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் சார்பில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொண்டு பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் விளாடிமர் புடின் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தொலைபேசி உரையாடலின் போது, இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பின் பல விஷயங்களில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தனர். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் சமீபத்தில் முடிவடைந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு உட்பட பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை இரு தலைவர்களும் பரிமாறிக் கொண்டனர் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த உரையாடலின்போது, தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இயலாது என்று நஷ்ய அதிபர் விளாடிமர் புடின் தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத ரஷ்ய அதிபரின் இயலாமையை பிரதமர் மோடி புரிந்து கொண்டதாகவும், இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ், அனைத்து முயற்சிகளுக்கும் ரஷ்யாவின் நிலையான ஆதரவிற்காக அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பிரிக்ஸ் மாநாடு காணொலி காட்சி வாயிலாகவே நடைபெற்று வந்த நிலையில், நடப்பாண்டில் பிரிக்ஸ் மாநாடு நேரடியாக நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் முதல்முறையாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்ற நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் மட்டும் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். ரஷ்யா சார்பாக வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரிக்ஸ் மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்டார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக கடந்த பல மாதங்களாகவே ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், எந்த நாட்டுக்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.