
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று காலை 7.20 மணி அளவில், உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் ரவீத்ந்திர கோசாய் (58) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை நேரத்தில் மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில், அவரது கழுத்திலும் பின்புறத்திலும் இரு துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
லூதியானா ஆர்.எஸ்.எஸ். ரகுநாத் நகர் கிளையில் முக்கியப் பொறுப்பாளராக இருந்தவர் ரவீந்திர கோசாய். இன்று காலை வழக்கம்போல், அந்த அமைப்பின் காலை நேர பயிற்சிக்கூட்டத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பியவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இது குறித்து கேள்விப்பட்டதும், உள்ளூர் ஆர்.எஸ்.எஸ்., பாஜக., பிரமுகர்கள் அவர் வீட்டுக்கு விரைந்தனர். ரவீந்திர கோசாய், மாவட்ட பாஜக.,வின் அலுவலக பொறுப்பிலும் இருப்பவர் என்பதால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த 2016 பிப்ரவரி மாதத்தில், கித்வாயி நகரில் உள்ள ஷாகிதி பூங்கா அருகில் உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் நரேஷ் குமார் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். பின் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். கடந்த 3 வருடங்களில் ஆர்.எஸ்.எஸ் பாஜக., பிரமுகர்கள் மீதான 5 வது படுகொலை; இதுவரை எந்தச் சம்பவத்திலும் கொலையாளிகள் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.