
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, நேற்று இந்தூரில் டி20 போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் இதில் தோனியின் டாப் ஆர்டரில் இறங்கும் ராசியும் சேர்ந்து கொண்டது. அதற்குக் காரணமாக இருந்த கேப்டன் ரோஹித்தின் ஒரு சைகை, இன்று இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நேற்றிரவு நடந்த டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 260 ரன்கள் குவித்தது. இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். இதில் குறிப்பிடத் தக்க அம்சம், துவக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, 43 பந்துகளை எதிர்கொண்டு, 118 ரன் (12 பவுண்டரி, 10 சிக்சர்) குவித்து ஆட்டம் இழந்தார். மேலும், குறைந்த பந்துகளில் சதம் அடித்த சாதனையையும் சமன் செய்தார்.
ரோஹித்துடன் மற்றொரு துவக்க வீரர் ராகுலும் 89 ரன் குவித்தார். அவருக்குப் பக்கபலமாக விளையாடிய தோனி, 21 பந்துகளில் 28 ரன் எடுத்தாலும், ராகுலுக்கு அருமையாக ஒத்துழைத்து மிகப் பெரும் ஸ்கோரை எட்ட உதவினார். குறிப்பாக, நீண்ட காலத்துக்குப் பின்னர் தோனி 3 வது வீரராகக் களம் இறங்கினார். இதனை ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியுடன் வரவேற்றனர்.
தோனி 3.வது வீரராக களம் இறங்கியது எப்படி என்று ஒரு சிலருக்குப் புரியவில்லை. ஆனால், தோனியை 3வது வீரராகக் களம் இறக்குமாறு, ஆட்டம் இழந்து மைதானத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த கேப்டன் ரோஹித் சர்மா, அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கையைச் சேர்த்து வைத்து சைகை மூலமாகத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோனியின் ரசிகர்கள் ரோஹித் சர்மாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, ரோஹித் இவ்வாறு சிக்னல் செய்தபோது, அதைப் புரிந்து கொண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சத்தம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தப் போட்டியில் இமாலய இலக்கை எதிர்கொண்டு ஆடிய இலங்கை அணி 172 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி 88 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது.