
குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் நகரில் உள்ள சோம்நாத் கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2-வது முறையாக நேற்ற தரிசனம் செய்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்திருந்த ராகுல் காந்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டதையடுத்து, மீண்டும் இங்கு வந்தார்.
கிர் சோம்நாத் நகருக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கட்சித் நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அசோக் கெலாட், மாநிலத் தலைவர் பரத்சின் சோலங்கி ஆகியோருடன் கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கு முன் கடந்த நவம்பர் 29-ந்தேதி ராகுல் காந்தி, தேர்தல் பிரசாரத்தின் போது, சோம்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அங்குள்ள விருந்தினர் புத்தகத்தில், இந்துக்கள் அல்லாதவர் என்ற பக்கத்தில்ராகுல் காந்தியின் பெயர் எழுதப்பட்டு இருந்ததாக பா.ஜனதாவினர் சர்ச்சையை கிளப்பினர்.
ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் இதற்கு பதில் அளிக்கையில், ராகுல் காந்தி தீவிரமான சிவ பக்தர், அவர் உடலில் பூணூல் கயிறு அணிந்துள்ளார் என்று விளக்கம் தரப்பட்டது.
கோயிலில் சாமி தரிசனம் முடித்த ராகுல் காந்தி அங்கிருந்து, அகமதாபாத் நகருக்கு புறப்பட்டார். அங்கு கட்சி நிர்வாகிகளிடமும், தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
மேலும், தெற்கு குஜராத், வடக்கு குஜராத், மத்திய குஜராத், சவுராஷ்டிரா-கட்ச் மண்டலம் ஆகியவற்றில் கடந்த தேர்தலைக் காட்டிலும் இப்போது காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது. அது குறித்தும் நிர்வாகிகளிடம் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.