
குஜராத்தின் புதிய அமைச்சரவையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா இடம்பெற்றுள்ளார். ஜாம்நகர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர், இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்ற 26 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் 2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சித் தலைமை அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி, முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர மற்ற அனைத்து குஜராத் அமைச்சர்களும் நேற்று (வியாழக்கிழமை) தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, இன்று ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை ராஜ்பவனில் சந்தித்த முதலமைச்சர் பூபேந்திர படேல், புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க அனுமதி கோரினார். இதுகுறித்து, குஜராத் ஆளுநர் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில், முதலமைச்சர் தன்னைச் சந்தித்ததையும், புதிய அமைச்சரவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவுக்கு அனுமதி கோரியதையும் உறுதிப்படுத்தினார்.
குஜராத் சட்டப்பேரவையில் மொத்தம் 182 உறுப்பினர்கள் உள்ள நிலையில், மொத்த பலத்தில் 15% அதாவது அதிகபட்சமாக 27 அமைச்சர்கள் வரை பதவியில் இருக்கலாம். இதற்கு முன் இருந்த அமைச்சரவையில், எட்டு கேபினட் அமைச்சர்களும், இரண்டு தனிப்பொறுப்புடன் கூடிய மாநில அமைச்சர்களும், ஆறு மாநில அமைச்சர்களும் இருந்தனர்.
ரிவாபா ஜடேஜா 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு, 50,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்காக ரவீந்திர ஜடேஜாவும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் கர்சன்பாய் கர்மூர் 23% வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திரசின் சத்துர்சின் ஜடேஜா 15.5% வாக்குகளையும் பெற்றனர்.