டெல்லி பல்கலை பேராசிரியரின் கன்னத்தில் அறைந்த ஏபிவிபி செயலாளர்! போலீஸ் கண்முன் அத்துமீறல்!

Published : Oct 17, 2025, 03:08 PM IST
ABVP leader slapping video

சுருக்கம்

டெல்லி பல்கலை கல்லூரியில், ஏபிவிபி மாணவர் சங்கப் பிரதிநிதி தீபிகா ஜா, ஆசிரியர் சுஜித் குமாரை காவல்துறை முன்னிலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து, கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லூரியில், மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளர் தீபிகா ஜா மற்றும் மேலும் இரண்டு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்கள், ஒரு ஆசிரியர் மீது காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி, கடந்த செப்டம்பரில் நடந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏபிவிபி இணைச் செயலாளர் தீபிகா ஜா

நேற்று (அக்டோபர் 16) டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லூரியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், மாணவர் யூனியனின் இணைச் செயலாளர் தீபிகா ஜா, ஆசிரியர் சுஜித் குமாரின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் ஆசிரியர் சுஜித் குமார், அண்மையில் கல்லூரி கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாணவர் சங்க (NSUI) உறுப்பினரை ஏபிவிபி உறுப்பினர்கள் தாக்கியது குறித்து அலுவலக அறையில் காவல்துறை முன்னிலையில் விசாரித்துக்கொண்டிருந்தபோது அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

 

ஆசிரியர்கள் கண்டனம்

இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர், சக ஆசிரியர் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் (DUTA) துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஏபிவிபி - மற்றுமொரு சர்ச்சை

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில், மூன்று ஏபிவிபி தலைவர்கள் மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில், மாணவர் இணைச் செயலாளர் தீபிகா ஜா, ஆசிரியர் சுஜித் குமார் தவறாக நடந்துகொண்டதாகவும், மது போதையில் இருந்ததாகவும், அவதூறாகப் பேசியதாகவும் கூறி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். எனினும், ஆசிரியர் சுஜித் குமார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்.. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் அறிவிப்பு!
இந்தியா நடுநிலையான நாடு அல்ல.. அமைதி தான் முக்கியம்.. புடினிடம் உறுதியாகக் கூறிய மோடி!