
மேற்கு வங்காள மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் ஏற்பட்ட மதக்கலவரம் தொடர்ந்து 2 நாளாக நேற்றும் நீடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த 5 கம்பெனி துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு 24பர்கானா மாவட்டம், பஷிர்கத் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், கடந்த திங்கள்கிழமை தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவு வௌியிட்டார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் இரு பிரிவினருக்கு இடையே கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவொருக்குஒருவர் தாக்கிக் கொண்டு, வீடுகள், கடைகளை சூறையாடினர்.
மேலும், ஜீப்,லாரி, கார்களுக்கு தீவைத்ததையடுத்து, பெரும் வன்முறையாக மாறியது. இதைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டும் கலவரம் கட்டுக்குள் வரவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், புறநகர் ரெயில் போக்குவரத்து, பஸ்போக்குவரத்து என முற்றிலும் முடங்கின. இதையடுத்து, நிலைமை மோசமடைவதைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை நாடினார்.
இதையடுத்து, 5 கம்பெனிகள் கொண்ட துணை ராணுவப்படையினர் பர்கானா மாவட்டத்தில் குவிக்கப்பட்டனர். இருந்தபோதிலும், இந்தியா-வங்காளதேசம் தேசிய நெடுஞ்சாலையை மறித்து நேற்று ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களை விரட்டியடித்து போலீசாரும், துணை ராணுவப்படையினரும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினம் பர்கானா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த கலவரம் தொடர்பாக பதூரியாபகுதியைச் சேர்ந்த வி.எச்.பி. அமைப்பைச் சேர்ந்த சஞ்சய் கோஸாமி, ராஜா லாஹிரி, சுரஜ் போடார், சுரோஜித்பிஸ்வாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் மாவட்டத்தில் பா.ஜனதா அலுவலகங்கள் குறிவைத்து வன்முறையாளர்களால் தாக்கப்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் கொல்கத்தாவில் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், “ மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதால்,மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு உடனடியாக ஒரு குழுவை அனுப்பி, மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலையை கண்காணிக்க வேண்டும்.
இது குறித்து பிரதமர் அலுவலகத்துக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன். மாநிலத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து மேற்குவங்காள அரசு செயல்படுகிறது. வடக்கு பர்கானா மாவட்டம், பதுரியாபகுதியில் நடந்தவை அனைத்தும் சிறுபான்மையினரை திருப்திபடுத்த நடத்தப்பட்டவை. மேற்குவங்காளம் ஜிகாதிகளுக்கு சொர்க்கமாக மாறி வருகிறது. இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக தலையிட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.