
அரியானா மாநில மாருதி நிறுவன கலவரத்தில் அதிகாரி பலியான சம்பவத்தில், 13 ஊழியர்களுக்கு, மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஊதிய உயர்வு போராட்டம்
அரியானா மாநிலம், குருகிராமம் மாவட்டம், மானேசர் பகுதியில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் ஆலை இயங்கி வருகிறது.
அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் சிலர் கடந்த 2012-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 18-ஆம் தேதி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீவைப்பில் அதிகாரி பலி
அப்போது, அந்த ஆலையின் ஒரு பகுதி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில், அங்கு பணியாற்றி வந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி அவனீஷ்குமார் தேவ் உயிரிழந்தார்.
மேலும், வெளிநாட்டினர் உள்ளிட்ட 100 ஊழியர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
31 பேர் குற்றவாளிகள்
இதையொட்டி ஆலையில் பணிபுரிந்த 148 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதி ஆர்.கே.கோயல் கடந்த வாரம் அளித்தார்.
மாருதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த 31 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அவர்களுக்கான தண்டனை விவரம் இப்போது அறிவிக்கப்பட்டது.
ஆயுள் தண்டனை
முக்கியக் குற்றவாளிகளான 13 பேருக்கு ஆயுள் சிறையும், 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டது.
14 ஊழியர்களுக்கு தலா ரூ.2,500 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.