தந்திரமாக லாபம் ஈட்டிய ரயில்வே; செய்த மாற்றம் இதுதான்; அள்ளியது கோடியில்!!

By SG Balan  |  First Published Sep 25, 2023, 11:11 AM IST

10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தனி இருக்கை அல்லது பெர்த் பெற்று முழு கட்டணத்தையும் செலுத்தி பயணித்துள்ளனர். இதன் மூலம் ரயில்வேக்கு கூடுதலாக ரூ.2,800 கோடி வருவாய் கிடைத்துள்ளது.


குழந்தைகள் பயணக் கட்டண விதிமுறைகளை மாற்றியமைத்ததன் மூலம் இந்திய ரயில்வே கடந்த ஏழு ஆண்டுகளில் ரூ.2,800 கோடிக்கு மேல் கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பான சிஆர்ஐஎஸ் (CRIS) அளித்த பதிலில் இதுகுறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட விதிமுறைகள் மூலம் 2022-23 நிதியாண்டில் மட்டும் ரயில்வேக்கு கூடுதலாக ரூ.560 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனால், இந்த ஆண்டு மிகவும் லாபகரமான ஆண்டாகவும் அமைந்துள்ளது.

Latest Videos

undefined

சிஆர்ஐஎஸ் (CRIS) டிக்கெட் மற்றும் பயணிகள், சரக்கு சேவைகள், ரயில் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் செயல்பாடுகள் போன்ற முக்கிய பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குகிறது.

கந்துவட்டி கொடுமை! தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி வாயில் சிறுநீர் கழித்த கும்பல்!

5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி பெர்த் அல்லது இருக்கைகளைத் தேர்வுசெய்தால், அவர்களுக்கு வந்தோருக்கான முழு கட்டணம் வசூலிக்கப்படும் என்று 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. இந்த விதிமுறை ஏப்ரல் 21, 2016 முதல் அமலுக்கு வந்தது.

முன்னதாக, ரயில்வே 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தனி படுக்கை அல்லது இருக்கை வழங்க, பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. திருத்தப்பட்ட விதிமுறையின்படி, 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனி பெர்த் அல்லது இருக்கையைத் தேர்வு செய்யாவிட்டால் பாதிக் கட்டணத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் உடன் பயணிக்கும் பெரியவர்களின் இருக்கையில் அமர்ந்துகொள்ள வேண்டும்.

2016-17 முதல் 2022-23 வரையிலான ஏழு ஆண்டுகளில், 3.6 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தனி இருக்கையை தேர்வு செய்யாமல் பாதிக் கட்டணத்தைச் செலுத்தி பயணித்துள்ளனர். அதே சமயத்தில், 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தனி இருக்கை அல்லது பெர்த் பெற்று முழு கட்டணத்தையும் செலுத்தி பயணித்திருக்கின்றனர். ஆனால், 2020-21ஆம் ஆண்டு கோவிட் தொற்றுநோய் கட்டுப்பாடுகள் காரணமாக, திருத்தப்பட்ட விதிமுறைகள் மூலம் 157 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது.

"ரயிலில் பயணம் செய்யும் மொத்த குழந்தைகளில், 70 சதவீதம் பேர் முழுக் கட்டணத்தைச் செலுத்தி, பெர்த் அல்லது இருக்கையைப் பெற விரும்புகிறார்கள்" என்று ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தகவல் கோரிய சந்திரசேகர் கவுர் சொல்கிறார். "நீண்ட தூர பயணத்தில், குழந்தைகளும் பெரியவர்களும் தனித்தனி பெர்த் அல்லது இருக்கையைப் பயன்படுத்துவது ரயில்வேக்கு பெரும் லாபமாக மாறியுள்ளது." எனவும் அவர் கூறுகிறார்.

டிசம்பரில் ஏழுமலையானை தரிசிக்க இன்று முதல் முன்பதிவு செய்யலாம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

click me!