தெலங்கானாவின் முதல் காங்கிரஸ் முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு!

By Manikanda PrabuFirst Published Dec 7, 2023, 2:30 PM IST
Highlights

தெலங்கானாவின் முதல் காங்கிரஸ் முதல்வவராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுள்ளார்

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் 64 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி 39 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து அம்மாநிலத்தில் பெரும்பான்மைமிக்க கட்சியாக உருவெடுத்துள்ள காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Latest Videos

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து துணை முதல்வராக மல்லு பாட்டி உள்பட மொத்தம் 11 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கான இலாக்காக்கள் பின்னர் அறிவிக்கப்படும். எல்பி ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தெலங்கானா மாநிலத்தின் முதல் காங்கிரஸ் முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார். ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014, ஜூன் 2ஆம் தேதி புதிய மாநிலமாக தெலங்கானா உதயமானது. அதே ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, புதிய மாநிலமாக உருவான தெலங்கானாவின் முதல் முதல்வராக சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார். அதன்பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் சந்திரசேகர் ராவின் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது.

மிக்ஜாம் புயல்: முதல்வர் ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

அம்மாநிலத்தில் அசைக்க முடியாத நபராக கருதப்பட்ட கேசிஆரின்  பிஆர்எஸ் கட்சி மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறும் எதிர்பார்க்கபட்ட நிலையில், தோல்வியடைந்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கேசிஆர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியான காம்மாரெட்டி தொகுதியில் அவரை தோல்வியடைய செய்து, காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார்.

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைத்து குறிப்பிடத்தக்க வகையில் வளர்த்ததில் ரேவந்த் ரெட்டிக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஆற்றல் மிக்க தலைவராக அறியப்படும் அவர், மாணவராக இருந்த போது, ஏபிவிபி உறுப்பினராக இருந்தார். ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வாகவும், தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் கேசிஆர் கட்சியின் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். 2017ஆம் ஆண்டு கேசிஆர் கட்சியின் இருந்து பிரிந்து காங்கிரஸில் இணைந்த அவர், 2019 மக்களவை தேர்தலில் அக்கட்சியின் மல்காஜ்கிரி தொகுதயில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, தெலங்கானா மாநில தேர்தலில் வெற்றி பெற்றதும் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

click me!