மிக்ஜாம் புயல்: முதல்வர் ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

By Manikanda PrabuFirst Published Dec 7, 2023, 2:02 PM IST
Highlights

மிக்ஜாம் புயல் பாதிப்பு சேதங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தன. இதன் காரணமாக, இந்த 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.

மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பால், உணவு பொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

Latest Videos

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு சேதங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின்போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் உடனிருந்தார். முன்னதாக, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழகத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும், கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் எனவும் அக்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மூன்று மாநிலங்களில் முதல்வர்களை அறிவிப்பதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி!

அத்துடன், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் கோரியிருந்த நிலையில், வெள்ள நிலைமையை மதிப்பிடுவதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார்.

இதனிடையே, புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி அறிவித்துள்ளது. மத்திய அரசு தனது தொகுப்பின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கும் மாநில பேரிடர் மீட்பு பணிகளுக்கான SDRF நிதியின் கீழ்  2ஆவது தவணையாக ஆந்திரா மாநிலத்திற்கு ரூ.493.60 கோடியும், தமிழகத்துக்கு ரூ.450 கோடியும் முன்கூட்டியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!