
குஜராத்தில் தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவர் 1 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க மத்திய அரசு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை தேசிய பாதுகாப்புக்காக செலவு செய்து வருகிறது.
பாதுகாப்புக்காக செலவிடப்படும் இந்தத் தொகை சற்றே அதிகம் என்றாலும் இவை அவசியமான ஒன்றே. இந்தத் தொகையை முன்னேற்றத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் இந்தியா சில ஆண்டுகளிலேயே தன்னிறைவைப் பெற்று வல்லரசாக உருவெடுக்கும்.
பாதுகாப்புக்காக அரசு செலவு செய்யும் பணம் நாம் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை உணராமல் சில பண முதலைகள் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன. அதற்கு செலவு செய்தேன், இதற்கு செலவு செய்தேன் என்று பொய் ரசீதுகளை காட்டி, கட்டிய வரிப்பணத்தையும் திரும்பப் பெறும் நல்லவர்களும் நம் தேசத்தில் உண்டு.
சுயநலத்தால் முழுக்க முழுக்க கட்டமைக்கப்பட்ட இவ்வுலகத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவரின் இச்செயல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடியவை.
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஜனார்த்தன்பன் . தான் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த 1 கோடி ருபாயை தனது மனைவியுடன் சென்று தேசிய பாதுகாப்பு நிதிக்காக நன்கொடை அளித்து அனைவரையும் புருவம் உயரச் செய்துள்ளார்.
கைநிறையப் பணம் இருந்தாலும், அதனை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தாமல், நாட்டு நலனுக்காக அளித்த இம்முதியவரின் மனம் அனைவருக்கும் இருந்தல் வேண்டும்.