
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ‘மகாகத்பந்தன்' கூட்டணியின் தோல்விக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது முதல் கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தத் தேர்தல் ஆரம்பம் முதலே நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 200 இடங்களுக்கு மேல் வென்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியால் 40 இடங்களைக் கூட தாண்ட முடியவில்லை.
இந்தச் சூழ்நிலையில், ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பதிவில், தேர்தல் முடிவு வியப்பளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
“மகாகத்பந்தன் கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்த பீகார் வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரில் கிடைத்துள்ள இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது. ஆரம்பம் முதலே நியாயமற்ற முறையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை.” என ராகுல் கூறியுள்ளார்.
"இந்தப் போர் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கானது. காங்கிரஸ் கட்சியும் 'இந்தியா' கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து, ஜனநாயகத்தைக் காப்பாற்றும் தங்களது முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவோம்," என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் ராகுல் காந்தியின் கருத்தை ஒத்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
"பீகார் மக்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அரசியலமைப்பு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயலும் சக்திகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். தேர்தல் முடிவுகளை முழுமையாக ஆய்வு செய்து, முடிவுகளுக்கான காரணங்களைப் புரிந்துகொண்ட பிறகு விரிவான பார்வையை முன்வைப்போம்," என்று கார்கே கூறியுள்ளார்.
"காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். உங்கள் கடின உழைப்புதான் எங்கள் பலம். மக்களுடன் சேர்ந்து அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காக்கும் போராட்டத்தைத் தொடர்வோம்," என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இம்முறை காங்கிரஸ் போட்டியிட்ட 61 தொகுதிகளில் வெறும் 6-ல் மட்டுமே வெற்றி பெற்றது. 2020-ல் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19-ல் வெற்றி பெற்றிருந்தது. கூட்டணியின் மற்றொரு பிரதான கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) 143 தொகுதிகளில் போட்டியிட்டு 25-ல் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த முறை 144 தொகுதிகளில் 75 வெற்றி பெற்றிருந்தது.