
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ்வுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் ராகுல் காந்தி தலைமையில் அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் மிக மோசமாக தோல்வி அடைந்து வருவதால் அவருக்கு எதிராக கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ராகுல் காந்தி பிரதமர் மோடியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதை நிறுத்தும் வரை மக்கள் அவருக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், ''மோடியைத் திட்டுவது மிகவும் சுலபம். ஆனால் மோடியாக மாறுவது மிகவும் கடினம். மோடியாக மாற, நாட்டின் மண்ணுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்
பீகார் மக்கள் இன்று அனுப்பியுள்ள செய்தி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. பிரதமர் மோடியின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் சதியை நீங்கள் (ராகுல் காந்தி) தொடரும் வரை, நாட்டு மக்கள் உங்களுக்குக் கண்ணாடியைக் (தோல்வியை) காட்டிக்கொண்டே இருப்பார்கள். இந்திய மக்கள் எதையும் பொறுத்துக்கொள்வார்கள், ஆனால் பிரதமர் மோடியின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் சதியை அவர்களால் இனி பொறுத்துக்கொள்ள முடியாது'' என்று தெரிவித்தார்.
யார் இந்த ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்?
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், கட்சிக்கு எதிராக தொடர்ந்து கலகக் குரல் எழுப்பியதால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ராகுல் காந்திக்கு நிர்வாகத் திறன் இல்லை என்று பொதுவெளியில் அவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதற்காக பிரதமர் மோடியை பாராட்டிய ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்த காங்கிரஸ் தலைமையை கடுமையாக கண்டித்தது குறிப்பிடத்தக்கது.