
ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் கடந்த 50 நாட்களாக நீடித்து வந்த கடும் பணத்தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிடலாம் எனத் தெரிகிறது.
அதேசமயம், வங்கிகள் சார்பில், போதுமான பணம் வங்கிகளுக்கு சப்ளைசெய்யப்படாமல், கட்டுப்பாடுகளை தளர்த்துவது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அரசிடம் தெரிவித்துள்ளனர்.
50 நாட்கள்
கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500,ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அடுத்த 50 நாட்களுக்கு மக்கள் சிரமங்களை தாங்கினால், கருப்புபணம் ஒழிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனக்கூறினார்.
கடும் சிரமம்
ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின் மக்கள் ஏ.டி.எம்களில் நாள் ஒன்றுக்கு ரூ.2500, வங்கிகளில் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடந்த 50 நாட்களாக வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லாமல் மக்கள் அன்றாடச் செலவுக்கே கடும் சிரமப்பட்டனர்.
நீக்கப்படலாம்?
இந்நிலையில், பிரதமர் மோடி கூறிய 50 நாட்கள் கெடு, நாளையுடன் முடிவுக்கு வருகிறது. ஆதலால், வங்கிகளிலும், ஏ.டி.எம்களிலும் மக்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஏனென்றால், ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகும் போது, ரூ.500, ரூ1000 நோட்டுகள் மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடி இருந்தது. அதில் ஏறக்குறைய 90 சதவீதம் பணம் வங்கிகளுக்கு வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருப்பதால், பணம் எடுக்க விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட சாத்தியம் அதிகம் இருப்பதாக மத்தியஅரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
எதிர்ப்பு?
ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ மற்ற வகையில், வங்கிகளிடம் மத்தியஅரசுகருத்து கேட்டபோது, பணம் எடுக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
போதுமான பணம் இல்லை....
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ1000 நோட்டுகள் மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடியில் 90 சதவீதம் திரும்ப வங்கிக்கு வந்துவிட்டது. ஆனால், இம்மாதம் 19-ந்தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, ரூ.5.92 லட்சம் கோடி புதிய நோட்டுகள் மட்டுமே வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆக, ரூ. 9 லட்சம் கோடி இடைவெளியில், பற்றாக்குறையுடன் இருக்கும் போது, கட்டுப்பாடுகளை தளர்த்துவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என வங்கி நிர்வாகத்தினர் அரசிடம் கூறியுள்ளனர்.
இது குறித்து ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ புழக்கத்தில் இருந்த ரூ.15.4 லட்சம் கோடியை திரும்பப் பெற்றுவிட்டு ரூ.6 லட்சம் கோடி புதிய நோட்டுகளை கொடுத்து மக்களுக்கு வினியோகம் செய்யக்கூறினால் எப்படி சமாளிப்பது. வங்கிகளுக்கு போதுமான அளவு பணத்தை அளித்தபின்தான்கட்டுப்பாடுகளை அரசு தளர்த்த வேண்டும்.
அவ்வாறு பணத்தை போதுமான அளவு வங்கிகளுக்கு வழங்காமல் கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தினால், வங்கிகளில் மக்கள் வந்து கூடுதலாக பணம் கேட்கும் போது, பணம் இருக்காது. அப்போது மக்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்படலாம். இது ஆபத்தான சூழலை உண்டாக்கும்'' எனத் தெரிவித்தனர்.
ஆதலால், போதுமான அளவு ரூபாய்கள் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டபின்தான்கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என அதிகாரப்பூர்வமற்ற வகையில் வங்கிகள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.