உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கத்தினுள் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளனர்
சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்கான் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சுரங்கத்திற்குள் வேலை செய்த 41 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 17 நாட்களுக்கு பின்னர் நேற்றிரவு அவர்கள் மீட்கப்பட்டனர்.
சுரங்கத்தினுள் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் 41 பேரும் சின்யாலிசூர் சமூக சுகாதார மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, அவர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
இந்த நிலையில், உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கத்தினுள் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் தங்களது 17 நாட்கள் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளனர். மீட்கப்பட்ட தொழிலாளி விஸ்வஜீத் குமார் வர்மா கூறுகையில், “இடிபாடுகள் விழுந்தவுடன், நாங்கள் சிக்கிக்கொண்டோம் என்று எங்களுக்குத் தெரியும். முதல் 10-15 மணி நேரம் நாங்கள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டோம். ஆனால் பின்னர், எங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் உலர் பழங்கள் வழங்க குழாய் போடப்பட்டது. பின்னர் ஒரு மைக் நிறுவப்பட்டது. நான் எனது குடும்ப உறுப்பினர்களுடன் பேச முடிந்தது. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இனி தீபாவளியைக் கொண்டாடுவேன்.” என்றார்.
சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளி சுபோத் குமார் வர்மா, 41 பேரையும் பத்திரமாக வெளியே கொண்டு வர முயற்சித்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நன்றி என்றார். “முதல் 24 மணிநேரம் கடினமாக இருந்தது, ஆனால் அதன் பிறகு குழாய் மூலம் எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன்.” என்றார்.
மீட்கப்பட்ட ஜார்கண்ட் மாநில தொழிலாளி அனில் பேடியாவின் தந்தை கூறுகையில், “எங்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. எனது மகனுடன் பேசினேன், அவர் நலமாக இருப்பதாக கூறினார். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனையில் இருப்பதாகவும் கூறினார். அவர்கள் மீட்கப்பட வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தோம்.” என்றார்.
“எனது கணவர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அழைப்பு வந்தவுடன் நாங்கள் தீபாவளியைக் கொண்டாடினோம். என் கணவரை மீட்டு வருவதற்காக என் தந்தை உத்தரகாண்ட் சென்றுள்ளார்.” என சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியை சேர்ந்த அங்கித் குமாரின் மனைவி பூமிகா சவுத்ரி தெரிவித்துள்ளார்.
சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து 41 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்பி, உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள கர்வாஸ்பூர் கிராமத்தை சேர்ந்த மீட்கப்பட்ட தொழிலாளி அகிலேஷ் குமாரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மண் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி கொண்டாடினர்.
Tamilnadu BJP: நாடாளுமன்ற தேர்தல்.. திமுக, அதிமுகவை முந்திய பாஜக.. அண்ணாமலை அதிரடி..!
சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளி சந்தோஷ் குமாரின் தாயார் கூறுகையில், “சந்தோஷிடம் ஃபோனில் பேசினோம், தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். இன்று தீபாவளி கொண்டாடினோம். மீட்பு பணியாளர்கள், மத்திய அரசு, மாநில அரசுக்கு நன்றி.” என்றார்.
அதேபோல், “ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம். நேற்று இரவு தீபாவளி கொண்டாடினோம், எங்களது கிராமம் முழுவதும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.” என மீட்கபப்ட்ட தொழிலாளி ராம் சுந்தரின் தாயார் தன்பதி கூறுயுள்ளார்.
மீட்கப்பட்ட தொழிலாளி ராம் மிலனின் மகன் ந்தீப் குமார் கூறுகையில், “நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எனது தந்தையை அழைத்து வருவதற்காக எனது உறவினர்கள் உத்தரகாண்ட் சென்றுள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.