Remembering K Kamaraj: காமராஜரும் காங்கிரஸ் கட்சியும்: கிங்மேக்கர் வகுத்த‘கே-பிளான்’: மறந்ததால் சரிந்தது

By Pothy RajFirst Published Oct 1, 2022, 1:04 PM IST
Highlights

இறுதிவரை வாடகை வீடு, சொந்தமாக சில கதர்வேட்டி, சட்டைகள், ரூ.150 பணம் இவைமட்டும்தான் சொத்து. 3 முறை முதல்வராக இருந்தும், பெற்ற தாயைக் கூட தன்னுடன் தங்கிக்கொள்ள அனுமதிக்காத நேர்மையான தலைவர் வாழ்ந்தார், மக்கள் மனதில் வாழ்கிறார், வாழ்வார் என்றால் தமிழகத்தில் கர்மவீரர் காமசாரர் மட்டும்தான்.

இறுதிவரை வாடகை வீடு, சொந்தமாக சில கதர்வேட்டி, சட்டைகள், ரூ.150 பணம் இவைமட்டும்தான் சொத்து. 3 முறை முதல்வராக இருந்தும், பெற்ற தாயைக் கூட தன்னுடன் தங்கிக்கொள்ள அனுமதிக்காத நேர்மையான தலைவர் வாழ்ந்தார், மக்கள் மனதில் வாழ்கிறார், வாழ்வார் என்றால் தமிழகத்தில் கர்மவீரர் காமசாரர் மட்டும்தான்.

இன்று காங்கிரஸ் கட்சியினர், மட்டுமின்றி மக்களின் மத்தியிலும் சரி சிலை அளவில் மட்டும்தான் காமராஜர் நினைவுகூரப்படுகிறார். அவரின் போற்றத்தகுந்த, பின்பற்ற வேண்டி கொள்கைகள், நிர்வாகத்திறன், நேர்மை ஆகியவை காற்றில் பறக்கவிடப்பட்டன. அதனால்தான் இன்று காங்கிரஸ் தேய்ந்து கட்டெறும்பு நிலைக்கு வந்துவிட்டது.

தமிழகத்தில் எந்தக் கட்சியை எடுத்தாலும் அவர்கள் கூறும் வாக்குறுதி, “நாங்கள் காமராஜர் ஆட்சியை அமைப்போம்” என்பதுதான். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்பது பொற்கால ஆட்சி என்பது நேரில் கண்டவர்கள் வாக்கு. அந்த ஆட்சியை இப்போதுள்ள எந்தகட்சியாலும், காங்கிரஸ் கட்சியால் கூட வழங்கிட முடியாது.

இன்றைய அரசியல் தலைவர்கள் காமராஜரை முன்னிறுத்தி அளிக்கும் வாக்குறுதிகள் தோற்றாலும், அவரின் பெயரால் வாக்குறுதிகள் மூலம் ஒரு தேசத் தலைவனாய் காமராஜர் ஒவ்வொரு முறையும் வென்று கொண்டிருக்கிறார். 

தான் படிக்கா விட்டாலும், இந்த தேசம் படிக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.. அதனால்தான் அவர் " பெருந்தலைவர் "

ஏழைப்பங்காளர், கல்விக் கண்திறந்த காமராஜர், படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, கர்மவீரர் என சிறப்பு பெயர்களால் புகழப்படுகிறார். அவரின் நினைவுநாள் அக்டோபர் 2ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
ஒருவரின் செயல்கள்தான் அவரின் நினைவுகளை காலத்துக்கும் பறைசாற்றும். அந்த வகையில் காமரசாரின் ஆட்சியும்,திட்டங்களும்தான் இன்றளவும் அவர் மக்கள் மனதில் நிற்க காரணம். 

பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம், கல்விக்கு அதிக முக்கியத்தும், ஏராளமான அரசு நிறுவனங்கள் உருவாக்கம்,அணைகள் கட்டுதல், ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான சமூக நலத்திட்டங்கள் இவரின் ஆட்சியில் உருவாக்கப்பட்டன.

தமிழக்தில் பெரும்பாலான மக்கள் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி இன்று குடிநீர் பருக முடிகிறது என்றால் அதற்கு சூத்திரகாரி, கா்த்தாவாக இருப்பவர் காமராஜர்தான். காமராஜர் ஆட்சியில்தான் தமிழகத்தில் ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டன, கால்வாய்கள் வெட்டப்பட்டன. அந்த அணைகள்தான் இன்று தமிழக மக்களின் தாகம் தீர்த்து வருகின்றன. 

விருநகர் மாவட்டத்தில் உள்ள விருதுபட்டியில் கடந்த 1903ம் ஆண்டு குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாக காமராஜர்  பிறந்தார். இவரின் இயற்பெயர் காமாட்சி. தாயார் சிவகாமி அம்மாள் மிகுந்த பாசத்தால் ராஜா என்று அழைத்ததால், காமராஜர் என்று பெயரில் பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.

காமரசார் தனது 6வயதிலேயே தந்தையை இழந்ததால்,  ஆரம்பக் கல்வியோடு படிப்பை நிறுத்தி தனது மாமாவின் கடையில் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்றப் புறப்பட்டார்.

டாக்டர் வரதராஜூலு நாயுடு, டாக்டர் கல்யாண சுந்திரம் முதலியார், ஜார்ஜ் ஜோஸப் போன்ற தேசத் தலைவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னைஈடுபடுத்திக்கொண்டார். ஹோம்ரூல் இயக்கத்தில் அங்கமாக இருந்து பல்வேறு போராட்டங்களில் காமராஜர் பங்கேற்றார்.

காமராசர் என்ற படிக்காத மேதையின் அரசியல் சித்தாந்த தொலைநோக்கு பார்வை!!

அதன்பின் இந்திய நேஷனல் காங்கிரஸ் கட்சியில் 1920ம் ஆண்டில் தனது 16வயதில் காமராஜர் முழுநேர ஊழியராக சேர்ந்து பணியாற்றினார். ராஜகோபாலாச்சாரியார் தலைமையில், நடந்த உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் வேதாரண்யம் நோக்கிச் சென்ற பயணத்தில் இடம் பெற்று காமராஜர் கைதாகி சிறை சென்றார். 

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ஏராளமான போராட்டங்களில் பங்கேற்ற காமராஜர், சுதந்திரப் போராட்டத்துக்காக 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் காமராஜர். சிறந்த பேச்சாளர், அரசியல்வாதியான சத்தியமூர்த்தியை காமராஜர் தனது அரசியல் குருவாக மதித்தார்.1936ம் ஆண்டு சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றபோது, காமராசரை செயலாளராக நியமித்தார். 

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே சத்தியமூர்த்தி காலமானார். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்தபின், சத்தியமூர்த்தி இல்லத்துக்குச் சென்று அவரின் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றியபின்புதான் காமராஜர் வேறு இடத்தில் கொடி ஏற்றினார்.

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தி்ல் முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றபின் முதன்முதலில் சத்தியமூர்த்தி இல்லத்துக்குச் சென்று அவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார். அதன்பின்புதான் தனது முதல்வர் பணிகளை காமராஜர் தொடங்கினார்.

மாடு மேய்த்த சிறுவன் கேட்ட ‘அந்த’ கேள்வி.! மதிய உணவு முதல் 16,000 பள்ளிகள் வரை - காமராஜரின் கல்வி பணிகள் !

1953ம் ஆண்டு ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது, ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த நற்பெயர் கெட்டதால், ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டியநிலை ஏற்பட்டது. 

தனது முதல்வர் பதவிக்கு சி. சுப்பிரமணியத்தை ராஜாஜி நியமித்தார். ஆனால், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் சுப்பிரமணியத்துக்கு எம்எல்ஏக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. காமராஜருக்கு அதிகமான வாக்குகள் இருந்ததால், கடந்த 1953ம் ஆண்டு தமிழக முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றார்

தமிழக முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றதும் தனது அமைச்சரவையை வித்தியாசமாக அமைத்தார். முதல்வர் பதவிக்கு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சர்களாக்கி அனைவரையும் காமராஜர் வியக்க வைத்தார். இதிலிலிருந்து காமராஜர் தன்னை ராஜதந்திரியாகவும் உயர்த்திக்கொண்டார்.

முதல்வராக காமராஜர்  பொறுப்பேற்றதும், ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்து, அவரால் மூடப்பட்ட 6ஆயிரம் பள்ளிக்கூடங்களைத் காமராஜர் திறந்து, புதிதாக 17ஆயிரம் பள்ளிக்கூடங்களையும் தொடங்கினார்.

மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வரவேண்டும், கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் பசியின்றி கல்வி கற்க வேண்டும், ஏழைகளின் கல்வியறிவு மேம்பட வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். இந்திய அளவில் தலைசிறந்த திட்டமாக பாராட்டப்பட்ட மதிய உணவுத்திட்டம் உலக அளவிலும் பாராட்டப்பட்டது.

காமராஜரின் மதிய உணவுத்திட்டத்தால் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளிக்கு வரும் ஏழைக் குழந்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் 7% சதவீதமாக இருந்த கல்வி காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

அதுமட்டுமல்லாமல் காமராஜர் ஆட்சியில்தான் தமிழகத்தில் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. பெல் நிறுவனம், நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனம்,மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், நீலகிரி புகைப்படசுருள் நிறுவனம், ரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை என ஏராளமான நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது. 

பவானி, மணிமுத்தாறு, ஆரணி, வைகை, அமராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம், நெய்யாறு உள்ளிட்ட ஏராளமான அணைகள், தடுப்பணைகள் கட்டப்பட்டன, கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. 

இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கம் மேம்பட வேண்டும் - ஆளுநர் தமிழிசை

இந்த அணைகளால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், தோட்டங்கள், விவசாய நிலங்கள் நீர்பாசன வசதி பெற்று, வேளாண் விளைச்சல் பெருகியது.ஈரோடு பவானி அணையால் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெற்றன, வைகை, சாத்தனூர் அணையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது.

தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்த காமராஜர், பதவியைவிட கட்சி நலனும், தேசத்தின் நலனும் முக்கியம் என்று எண்ணி செயல்பட்டார். காங்கிஸ் கட்சியும் மக்கள் மத்தியில் மெல்ல செல்வாக்கு இழப்பதை காமராஜர் அடையாளம் கண்டார். அதன்படி “கே-பிளான்” எனும் திட்டம் அதாவது காமராஜர் திட்டத்தை கொண்டுவந்தார்.

இதையடுத்து, 1963ம் ஆண்டு அக்டோபர் 2ம்தேதி தனது முதல்வர் பதவியை காமராஜர் ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சிப்பணிக்காக சேர்ந்தார். கட்சியில் உள்ள அனைத்து மூத்த தலைவர்களும் பதவியை ராஜினாமா செய்து, இளைஞர்களுக்கு வழிவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என அழைப்புவிடுத்தார். 

இதை அப்போது ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள் பலர் ஏற்றுக்கொண்டு தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கட்சிப்பணிக்கு வந்தனர். லால்பக்தூர் சாஸ்திரி, ஜெகஜீவன் ராம், மொரார்ஜி தேசாய், பிஜூ பட்நாயக், எஸ்.கே.பாட்டீல் ஆகியோர் மத்தியஅ மைச்சர் பதவியை ராஜினாமா செய்து கட்சிப்பணிக்கு வந்தனர். 

காமராசரின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள், மக்களிடம் நன்மதிப்பை பெற்றது, அனைவருக்கும் முன்மாதிரியாக காமராஜர் விளங்கினார். 

காமராஜர் பிளானை இன்றுள்ள காங்கிரஸ் கட்சி செயல்படுத்தி இருந்தால் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்திருக்காது. காங்கிரஸ் கட்சி பெயரளவுக்கு மட்டும்தான் இன்று காமராசரை நினைவுகூறுகிறதே தவிர, அவரின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுள்ளது.

காமராஜரின் திறமையைப் பார்த்து வியந்த ஜவஹர்லால் நேரு, அவரைத் தேசிய அரசியலுக்கு அழைத்துவந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்த்தினார். இதையடுத்து 1963ம் ஆண்டு, அக்டோபர் 9ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவராக காமராஜர் பொறுப்பேற்றார்.

ஜவஹர்லால் நேரு காலமானபின்பு காங்கிரஸ்கட்சி சற்று தடுமாறியது. அன்றைய தினத்தில் காங்கிரஸ் இன்று போல் ஒரு அரசியல் கட்சியாக மட்டும் பார்க்கப்படவில்லை. நாட்டின் வளர்ச்சிப் பாதையை சிருஷ்டிக்கும் ஒரு இயக்கமாகவும் பார்க்கப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த பொறுப்புகள் அந்த இயக்கத்தையே சார்ந்திருந்தது.

ஆனால்,  காமராசரின் திறமை, நிர்வாகத்திறன் ஆகியவற்றால் காங்கிரஸ் கட்சி சுதாரித்து நின்றது. நேருவால் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட காமராஜர்தான் அடுத்த பிரதமராக வருவார் என தேசமே எதிர்பார்த்திருந்தது. 

ஆனால், லால் பகதூர் சாஸ்திரியை பிரதமர் நாற்காலியில் அமர்த்தியது அந்தக் கருப்பு வைரம். உள்ளூர் சேர்மன் பதவிக்கே எத்தனை அக்கப்போர்கள் நடக்கின்றன. ஆனால் அந்த எளிய மனிதர் அந்த உயர்ந்த பதவியை புறந்தள்ளினார்

நேரு காலமாகியபின் கடந்த 1964ம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக காமராஜர் தேர்ந்தெடுத்தார், அதன்பின் லால்பகுதூர் சாஸ்திரி திடீரென காலமாகினார். அடுத்த பிரதமராக மொரார்ஜி தேசாய் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துணிச்சலாக தேசாயை எதிர்த்து காமராஜரை காங்கிரஸ் நிர்வாகிகள் களமிறக்கினார்கள். 

காமராஜர் நினைத்திருந்தால், 2வது முறையாக தனக்குக் கிடைத்தவாய்ப்பால் பிரதமராகி இருக்காலம். ஆனால், இந்தியும், ஆங்கிலமும் சரியாகத் தெரிந்த ஒருவர்தான் இந்தப் பதவிக்கு பொருத்தமானவர். நான் அமர்வது சாத்தியமில்லை எனக் கூறி  1966ம் ஆண்டு 48வயதான நேருவின் மகள் இந்திரா காந்தியை பிரதமராக காமராஜர் நாட்டுக்கு அடையாளம் காட்டினார். 

தேசத்துக்கு இரு சிறந்த பிரதமர்களை வழங்கிய பெருமை காமராசரையே சாரும். இதனால் தேசிய அளவில் காமராஜர் கிங் மேக்கர் என்று புகழப்பட்டார்.

தன்னுடைய வாழ்நாள் கடைசி வரையிலும் ஏழைகளுக்கும், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான உதவிகளை, நலத்திட்டங்களை காரமராசர் செய்தார்.  இவரின் மறைவுக்குப்பின் 1976ம் ஆண்டு மத்திய அரசு பாரத ரத்னா விருதை விருதை வழங்கி கவுரவித்தது.

பணத்துக்கும் பதவிக்கும் விலை போகும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு காமராஜரின் வாழ்க்கை, ஒரு மிகப்பெரிய பாடம். எப்போதுமே எல்லாஇடத்திலுமே ராஜாக்கள் போற்றப்படுவதில்லை, ராஜாக்களை உருவாக்கிய கிங்மேக்கர்களே போற்றப்படுகிறார்கள் நினைவுகூரப்படுகிறார்கள். 

click me!