கொரோனா தடுப்பு பணிக்காக கோடிகளை வாரி வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்.. எத்தனை கோடினு பாருங்க

By karthikeyan VFirst Published Mar 30, 2020, 7:59 PM IST
Highlights

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நாட்டு மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1200ஐ நெருங்கிவிட்ட நிலையில், 30 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா, சமூக தொற்றாக பரவுவதை தடுக்கும் வகையில், இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. 

ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டிய நிலையில் உள்ள அரசாங்கம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்துவருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழில்துறை, தொழில் முனைவோர், சிறு குறு வணிகர்கள், தினக்கூலிகள், மாத ஊதியதாரர்கள் என அனைத்து தரப்புக்குமான நிதி சார்ந்த சலுகைகளையும் அறிவிப்புகளையும் அரசு அறிவித்துவருகிறது. 

அதுமட்டுமல்லாமல்,, கொரோனாவிற்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கான மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. இந்த பணிகளை எல்லாம் மேற்கொள்வதற்கு அரசுக்கு நாட்டு மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று சினிமா பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் நிதியுதவி அளித்துவருகின்றனர். பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த சில நிமிடங்களில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடியை பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வழங்கினார். கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, ரஹானே, விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகியோரும் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நிதியுதவி வழங்கினார்கள். 

கங்குலி, சச்சின் டெண்டுல்கர், பிவி சிந்து ஆகியோர் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுக்கும் முன்பாகவே நிதியுதவி செய்ய தொடங்கிவிட்டனர். 

தனியார் நிறுவனங்களும் நிதியுதவி செய்துவருகின்றனர். டாடா நிறுவனம் சார்பில் ரூ.1500 கோடி வழங்கப்பட்டது. கோட்டக் மஹிந்திரா வங்கி சார்பில் மொத்தம் ரூ.60 கோடி நிதியுதவி செய்யப்பட்டது. பிசிசிஐ சார்பில் ரூ.50 கோடி, பிரதமர் கேர்ஸுக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டது. 

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு ரூ.500 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காகவே பிரத்யேகமாக மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனம் மருத்துவமனை ஒன்றை கட்டிய நிலையில், தற்போது பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடியை பிரதமர் கேர்ஸூக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளது. 
 

click me!