
தனது இறுதி சடங்கிற்காக பழைய 500 ரூபாய் நோட்டுக்களை சேமித்து வைத்த மூதாட்டி, உயிரிழந்த பிறகு அந்த பணத்தை மாற்ற முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகேயுள்ள பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மனைவி லட்சுமி. அய்யம் பெருமாள் சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். கணவர் இறந்துவிட்ட பிறகு, லட்சுமி, தனது தம்பியான முத்துசாமியின் வீட்டில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாகவும் முதுமை காரணமாகவும் லட்சுமி கடந்த நேற்று உயிரிழந்தார்.
லட்சுமியை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை முத்துசாமியின் குடும்ப உறுப்பினர்கள் நடத்தி வந்தனர். இறந்தவர் பயன்படுத்திய பொருட்களை அப்புறப்படுத்தும்போது அவரது தலையணைக்கு அடியில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து லட்சுமியின் சகோதரர் முத்துசாமி கூறும்போது, என் அக்காவுக்கு தமிழக அரசு மூலம் முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. அதனை அவரே வாங்கி செலவு செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், நான் இறந்த பிறகு இறுதி சடங்கு செய்வதற்காக யாரும் கஷ்டப்பட வேண்டாம் என்று கூறினார். அவர் கூறியதை அப்போது நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி அறியாத எனது அக்கா, தன் சேமிப்பு பற்றி எந்த தகவலையும் எங்களிடம் தெரிவிக்காமல் விட்டுவிட்டார். இந்த செல்லாத நோடடுக்களை வைத்துக் கொண்டு என்ன செய்வதேன்று தெரியவில்லை என்று கூறினார்.