
கர்நாடக மாநிலத்தில் மூட நம்பிக்கைக்கு எதிரான, மனிதநேயமற்ற கொடூர வழக்கங்கள், மந்திரதந்திர மசோதா-2017 அந்த மாநில சட்டசபையில் சிறு மாற்றங்களுடன் ஒரு மனதாக நிறைவேறியது.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபைக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மூட நம்பிக்கைக்கு எதிரான, மனிதநேயமற்ற கொடூர வழக்கங்கள், மந்திரதந்திர மசோதா-2017 செவ்வாய்கிழமையன்று சமூக நலத்துறை அமைச்சர் எச். ஆஞ்சநேயா அறிமுகம் செய்தார்.
இந்த மசோதா அறிமும் செய்தபோது, எதிர்க்கட்சி தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், இந்துக்கள் பின்பற்றும் சில பழக்கங்களை தடை செய்யக்கூடாது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் ஆஞ்சநேயா பேசுகையில், “ எம்.எல்.ஏ.க்கள் அளித்த யோசனைகள், பரிந்துரைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, விதிமுறைகள் சேர்க்க முயற்சி எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
இந்த மசோதாவை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வரவேற்ற நிலையில், . தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இன்னும் பின்பற்றப்பட்டு வரும் ஏராளமான மூட நம்பிக்கைகள் மீது கவனம் செலுத்தி, விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களான ஜெகதீஸ் சட்டர், சி.டி. ரவி, சுரேஷ் குமார், கோவிந்த் கர்ஜோல், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஒய்.எஸ்.வி.தத்தா, எச்.டி. குமாரசாமி, எச்.டி. ரேவண்ணா ஆகியோர் இந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசி, ஆலோசனைகள் வழங்கினர்.
பி.ஆர். பாட்டீல் பேசுகையில், “ வாஸ்து, ஜோதிடத்தை தடை செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். எச்.டி. குமாரசாமி பேசுகையில், “ அரசு அலுவலகங்களில் பூஜைகள் செய்யப்படுவதை நிறுத்த வேண்டும்’’ என்றார்.
கர்நாடகத்தில் உள்ள உயர்சாதியினர்(மத்வா பிராமனர்கள்) தங்கள் உடம்பில் குத்திக்கொள்ளும் ஒருவித முத்திரைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த முத்திரை உடம்பில் குத்துவதன் மூலம் நோய்கள் விலகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.