
Rekha Gupta Spoke Strongly After The Attack: டெல்லி முதல்வர் ரேகா குப்தா சிவில் தனது லைன்ஸ் முகாம் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மக்களை சந்தித்தபோது மனு கொடுக்க வந்தவர்களில் ஒருவரான ராஜேஷ் பாய், திடீரென முதல்வர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் ரேகா குப்தாவுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்
இந்த தாக்குதலுக்குப் பிறகு, ரேகா குப்தாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவரது நிலை நன்றாக இருப்பதாக டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்சேவா உறுதிப்படுத்தினார். அவருக்கு கை, தோள்பட்டை, மற்றும் தலையில் லேசான காயங்கள் ஏற்பட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்தார். தாக்குதல் நடத்திய ராஜேஷ், தனது உறவினர் ஒருவர் சிறையில் இருப்பதற்கு விடுதலை கோரி முதல்வரை சந்திக்க வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்? நடத்தியது யார்?
மேலும், சம்பவத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, அவர் ரேகா குப்தாவின் ஷாலிமார் பாக் இல்லத்தைச் சுற்றி நடமாடி, வீடியோ பதிவு செய்ததாக சிசிடிவி காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. இது, தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்தனர். ராஜேஷ் சக்ரியாவுக்கு முன்பு ஐந்து குற்ற வழக்குகள், அதில் இரண்டு கத்தியால் தாக்கிய வழக்குகள் உட்பட, பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. அவரது தாயார், பானுபென், தனது மகன் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர் என்றும், டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள தெரு நாய்களை பிடித்து காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் அவர் வருத்தம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.
மக்கள் சேவையை நிறுத்த முடியாது
இந்நிலையில், தாக்குதலுக்கு பிறகு டெல்லி முதல்வர் ரேகா குப்தா மனம்திறந்து பேசியுள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''இந்த தாக்குதலால் நிச்சயமாக நான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால் இப்போது நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். இத்தகைய தாக்குதல்கள் ஒருபோதும் எனது ஆன்மாவையோ, மக்களுக்கு சேவை செய்யும் எனது உறுதியையோ உடைக்க முடியாது. இனி, முன்பைவிட மேலும் ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களிடையே நான் இருப்பேன்" என்று அவர் கூறினார்.
மக்கள் தான் என் பலம்
மேலும், "என்னை சந்திக்க வருவதற்கு எனது நலம் விரும்பிகள் தங்களை வருத்திக்கொள்ள வேண்டாம். விரைவில் நான் மீண்டும் உங்களை சந்திப்பேன். பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் வழக்கம்போல் நடைபெறும். மக்களின் நம்பிக்கையும் ஆதரவும் என்னுடைய மிகப்பெரிய பலம்'' என்று ரேகா குப்தா தெரிவித்தார்.