ரெட், ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்.. எந்த எச்சரிக்கை விடுத்தால் நாம் கவலைப்பட வேண்டும்?

By Ramya s  |  First Published Jul 11, 2023, 9:14 AM IST

பொதுவாக பருவமழை காலங்களில், ரெட் அலர்ட், மஞ்சள் அலர்ட் போன்ற மழை எச்சரிக்கை அறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.


நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக டெல்லி, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிக கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பருவமழை காலங்களில், ரெட் அலர்ட், மஞ்சள் அலர்ட் போன்ற மழை எச்சரிக்கை அறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. வரவிருக்கும் வானிலை நிகழ்வுகள் மற்றும் அவற்றின் தீவிரம் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க நிறம்-குறியிடப்பட்ட எச்சரிக்கைகளை அடிக்கடி வெளியிடுகிறது.

மழை, பனிப்பொழிவு, இடியுடன் கூடிய மழை, பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை, தூசிப் புயல்கள் மற்றும் வெப்ப அலைகள் மற்றும் குளிர் அலைகள் போன்ற மோசமான வானிலை நிலைகளின் போது இந்த எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இந்த வண்ணக் குறியீடுகள் எப்போது வழங்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும் சில அளவுருக்கள் உள்ளன. நான்கு வண்ணக் குறியீடுகள் உள்ளன. அவை, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகியவை ஆகும். ஒரு வானிலை நிகழ்வின் நிகழ்தகவு மற்றும் அதிகபட்சம் 5 நாட்களுக்கு செல்லுபடியாகும் தாக்கம் சார்ந்த எச்சரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த குறியீடு மதிப்பீடு செய்யப்படுகிறது.

Tap to resize

Latest Videos

மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகளும் 'விவாகரத்து' செய்கின்றன.. ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்

வானிலை எச்சரிக்கைகள் எப்படி வெளியிடப்படுகின்றன?

மழைப்பொழிவு எச்சரிக்கைகளை பொறுத்தவரை பச்சை வண்ணக்குறியீடு 24 மணி நேரத்தில் 64 மி.மீ.க்கும் குறைவாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் போது வெளியிடப்படும்.

64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும்.

ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கைகள் முக்கியமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காகவும், அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காகவும் விடுக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது, காற்றின் வேகம் எச்சரிக்கையை தீர்மானிக்கிறது. புழுதிப் புயல் ஏற்பட்டால், எச்சரிக்கையை வெளியிடும் போது காற்றின் வேகம் மற்றும் தெரிவுநிலை இரண்டும் பரிசீலிக்கப்படும்.

இந்த வண்ணக் குறியீடுகள் எதைக் குறிக்கின்றன?

பச்சை எச்சரிக்கை - அறிவுரை இல்லை: பச்சை எச்சரிக்கை என்பது வானிலை நிகழ்வு இருந்தாலும், அதற்கு எந்த விதமான ஆலோசனையும் வழங்கப்பட வேண்டியதில்லை.

மஞ்சள் எச்சரிக்கை - எச்சரிக்கையாக இருங்கள்: மஞ்சள் எச்சரிக்கை மோசமான வானிலையைக் குறிக்கிறது, இது அன்றாட வாழ்க்கையில் இடையூறுகளை ஏற்படுத்தும்.

ஆரஞ்சு எச்சரிக்கை - தயாராக இருங்கள்: மிகவும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படும் போது ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிடப்படுகிறது, இது போக்குவரத்து, ரயில், சாலை மற்றும் விமானத்திற்கு இடையூறு விளைவிக்கும். மின்சார விநியோகத்திலும் இடையூறு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கை - நடவடிக்கை எடுக்க வேண்டும்: மிகவும் மோசமான வானிலை போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகத்தை சீர்குலைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் போது வழங்கப்படும் எச்சரிக்கை சிவப்பு எச்சரிக்கை ஆகும். இந்த வானிலை சூழல் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.

ஏசி பெட்டிகள் ஏன் ரயிலின் நடுவில் மட்டும் இருக்கின்றன? இதுதான் காரணமா?

click me!