புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 23 ஆம் தேதியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைக்கலாம் என்றும் தினமும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள செப்.30 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதை அடுத்து பொருளாதாரத்திற்கு தேவையான நாணய புழக்கத்தை உருவாக்க ஆர்.பி.ஐ சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் நவம்பர் 2016 இல் 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள்... என்ன செய்வது? இதோ முழு விவரம்!!
2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. சந்தையில் போதுமான பிற மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது. அதனால், 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்திருந்தது. புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாததே அதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 274 கோடி எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 214 கோடியாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியது பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பு… பாதுகாப்பு அமைச்சகம் தகவல்!!
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், மத்திய அரசின் புலனாய்வு அமைப்பினர் நாடு முழுவதும் நடத்திய பல்வேறு சோதனைகள் மற்றும் பல மாநிலங்களின் சட்டமன்ற மற்றும் இடைத் தேர்தல் நேரத்தில் நடந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணங்கள் பெரும்பாலும் 2,000 ரூபாய் நோட்டுகளே என்று கூறப்பட்டது. மேலும், கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் 2,000 ரூபாய் நோட்டுகளாக பதுக்கி வைத்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. இத்துடன் 2,000 ரூபாய் நோட்டுக்கள் மாதிரியே போலி ரூபாய் நோட்டுக்கள் அதிகளவில் புழக்கத்திற்கு வந்தததாகவும், இவை நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கியும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2018, மார்ச் 31ஆம் தேதி 6.73 லட்சம் கோடி அளவிலான 2000 ரூபாய் நோட்டுக்கள் நாட்டில் புழக்கத்தில் இருந்தன. இதுவே 2023, மார்ச் 31ஆம் தேதி 3.62 லட்சம் கோடியாக, அதாவது 10.8 சதவீதம் குறைந்தது. இதுவே 2018ஆம் ஆண்டில் 37.3 சதவீதமாக இருந்தது.
2016 ஆம் ஆண்டில் 500, 1000 நோட்டுக்களை திடீரென ஒரே நாள் இரவில் தடை செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். இதனால், தங்களிடம் இருந்த பணத்தை வங்கியில் மாற்ற முடியாமல் மக்கள் திண்டாடினர். பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. வங்கிகளில் வரிசையில் காத்து இருந்த முதியவர்கள் மயங்கி விழுந்தனர். ஆங்காங்கே இறப்புகளும் நிகழ்ந்து இருந்தன. வெளியூருக்கு சென்று இருந்தவர்கள், வீடு திரும்ப முடியாமல் திண்டாடினர். வாடகைக் கார் மற்றும் ஆட்டோக்களில் தடை செய்யப்பட்ட பணத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இது அப்போது பெரிய விவாதத்தை கிளப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் பேச்சுப்பொருளாக இருந்து வருகிறது.
இந்த முறை ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு அல்லது டெபாசிட் செய்வதற்கு செப்டம்பர் 30, 2023 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால், மக்களுக்கு நிறைய நாட்கள் இருக்கிறது. மக்களை உடனடியாக பாதிக்காது. பெரும்பாலும் பலரிடம் 2000 ரூபாய் இருப்பதற்கான வாய்ப்புக்களும் குறைவுதான்.