ரோட்டுகடை முதல் ஸ்டார் ஹோட்டல் வரை..! அலறவிடும் உணவு பாதுகாப்பு அதிகாரி.. கொண்டாடும் சாமானியர்கள்

Published : Aug 24, 2026, 11:30 PM IST
Tukaram Mundhe

சுருக்கம்

மும்பையில் உணவகங்கள் மற்றும் சாலையோரக் கடைகளில் சுகாதார விதிமீறல்களுக்கு எதிராக 3,000-க்கும் மேற்பட்ட அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறார் உணவுப் பாதுகாப்பு ஆணையர் துகாராம் முண்டே.

துகாராம் முண்டே... இந்திய அதிகாரி ஒருவரின் பெயர் தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. 51 வயதான இவர், மகாராஷ்டிரா மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையராக பொறுப்பேற்ற பிறகு, வர்த்தகத் தலைநகரான மும்பையில் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மோசமான சுகாதார நிலை மற்றும் பாதுகாப்பற்ற உணவுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் நாடு முழுவதும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த சில வாரங்களில் மட்டும் 4 டோமினோஸ் மற்றும் ஒரு பீட்சா ஹட் உணவகத்தின் உணவு விற்பனை அனுமதிகளை இடைநிறுத்தும் நடவடிக்கையை முண்டே தலைமையிலான குழு மேற்கொண்டுள்ளது. மேலும், அவர் பொறுப்பேற்ற மே மாதம் முதல் கிரிக்கெட் கிளப்புகள், ஹோட்டல்கள் மற்றும் பிரபல உணவகங்கள் என பல்வேறு இடங்களில் 3,000-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

மும்பை நீதிபதி ஒருவர், தனியார் நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமே முண்டே கடுமையாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டியதுடன், நீதிமன்ற கேன்டீன்களிலும் சோதனை நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, முண்டேவின் குழுக்கள் சில மணி நேரங்களிலேயே நீதிமன்ற கேன்டீன்களிலும் சோதனை நடத்தின. உரிமம் இல்லாமல் செயல்பட்ட சில கேன்டீன்கள் உடனடியாக மூடப்பட்டன.

“விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட முயற்சிப்பவர்கள், கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று தனது கடுமையான அணுகுமுறை குறித்து Reuters-க்கு அளித்த பேட்டியில் முண்டே தெரிவித்துள்ளார்.

“நீங்கள் மக்களின் உயிருடன் தொடர்புடைய விஷயத்தை கையாள்கிறீர்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் மனதில் இடம்பிடித்த முண்டே

முண்டேவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு இந்தியா முழுவதும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த நீண்டகால அதிருப்திக்கு அவர் குரல் கொடுத்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

டோமினோஸ், மெக்டொனால்ட்ஸ் போன்ற வெளிநாட்டு உணவுச் சங்கிலிகள் இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வந்தாலும், சுகாதாரம் குறித்த கவலைகள் நீண்ட காலமாக இருந்துவரும் உள்ளூர் உணவகங்கள், சாலையோரக் கடைகள் மற்றும் சிறிய உணவகங்களும் இந்திய மக்களிடையே தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

2020-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் 1 லட்சத்துக்கும் அதிகமான உணவு மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர். அவற்றில் சுமார் 20 சதவீதம் உணவுகள் பாதுகாப்பற்றவை, தரமற்றவை அல்லது முறையான லேபிள் இல்லாதவை என கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 8,000 உணவு வணிக உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

“இந்தியாவில் இப்படித்தான் நடக்கும் என்று கூறி, பல ஆண்டுகளாக இதை இயல்பான விஷயமாக மக்கள் ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டனர். உண்மையில் இது நீண்டகாலமாக தேங்கியிருந்த கோபம்” என்று நுகர்வோர் ஆலோசனை நிறுவனமான The Knowledge Company-யின் பங்குதாரர் அன்குர் பிசென் தெரிவித்துள்ளார்.

“முண்டே போன்ற ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை. அவருடைய நடவடிக்கைகள் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன” என்றும் அவர் கூறியுள்ளார்.

எலிகள் முதல் காலாவதியான உணவுகள் வரை... அதிரவைத்த சோதனைகள்

கண்ணாடி அணிந்து, தனித்துவமான மீசையுடன் காணப்படும் முண்டே, வழக்கமான அதிகாரிகளைப் போல அல்லாமல் வித்தியாசமான முறையில் செயல்பட்டு வருகிறார்.

யாரும் தனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், தன்னை நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ யாரும் அச்சுறுத்த முடியாது என்றும் அவர் தொலைக்காட்சி நேர்காணல்களில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இந்திய நிர்வாகப் பணியில் 21 ஆண்டுகளாக இருக்கும் முண்டே, தனது பணிக்காலத்தில் பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். “ஒவ்வொரு ஆண்டும் எனக்கு இடமாற்றம் கிடைக்கிறது” என்று அவர் 2018-ம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

தற்போது, முண்டே தலைமையிலான உணவுப் பாதுகாப்புக் குழுவின் சோதனை நடவடிக்கைகள் தினந்தோறும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

உணவகங்கள் மற்றும் மளிகைக் கிடங்குகளில் நடத்தப்படும் சோதனைகளுக்குப் பிறகு வெளியிடப்படும் புகைப்படங்களில், அழுக்கடைந்த சுவர்கள், ஊர்ந்து செல்லும் கரப்பான் பூச்சிகள், எலிகள் மட்டுமின்றி காலாவதியான உணவுப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் பல இந்தியர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

“இவ்வளவு அதிகமான விதிமீறல்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று முண்டே தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த வாரம் Reuters 25 சாலையோர உணவுக் கடைகள் மற்றும் உணவகங்களில் நடத்திய பார்வையில், முண்டேவின் சோதனைகள் குறித்த அச்சம் வியாபாரிகள் மத்தியில் அதிகரித்திருப்பது தெரியவந்தது.

ஒரு வியாபாரி சீன உணவுகளில் பயன்படுத்தி வந்த செயற்கை சிவப்பு நிறத்துக்கு பதிலாக இயற்கையான மிளகாயைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். மற்றொரு வியாபாரி தினமும் மூன்று முறை சமையல் எண்ணெயை மாற்றுவதுடன், ஊழியர்கள் கையுறை மற்றும் தலைக்கவசம் அணிவதையும் கட்டாயமாக்கியுள்ளார்.

வடா பாவுக்கும் வந்தது புதிய விதி!

மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் பிரபலமான சாலையோர உணவான ‘வடா பாவும்’ முண்டேவின் கவனத்தில் இருந்து தப்பவில்லை.

ஜூன் மாதம், வடா பாவ் உள்ளிட்ட உணவுகளை பேப்பரில் சுற்றிக் கொடுக்கும் நடைமுறைக்கு முண்டே தடை விதித்தார். குறிப்பாக, உணவை பேக்கிங் செய்ய செய்தித்தாள்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது.

இதன் மாற்றம் வாடிக்கையாளர்களிடையேயும் தென்படத் தொடங்கியுள்ளது. சாலையோர உணவுகளை சாப்பிடுவதில் மக்கள் தற்போது அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

14 வயதான சுப்ரியா வாக்லே, தனக்கு மிகவும் பிடித்த வடா பாவ் தற்போது சுத்தமான பட்டர் பேப்பரில் பேக் செய்து கொடுக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“இது நிச்சயமாக ஒரு நிம்மதி” என்று அவர் கூறியுள்ளார்.

பிரபல அந்தஸ்து கிடைத்தாலும்... விமர்சனங்களும் தொடர்கின்றன!

சில டோமினோஸ் மற்றும் பீட்சா ஹட் கிளைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முண்டே தலைமையிலான குழு மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு கிளையின் அனுமதியையும் இடைநிறுத்தியது.

அங்கு “உயிருடன் காணப்பட்ட பூச்சிகள் (கரப்பான் பூச்சிகள்)” மற்றும் “அழுகிய உணவு” இருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் தங்களுக்கு “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறை” இருப்பதாக மெக்டொனால்ட்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், அதிகாரிகள் தெரிவித்துள்ள கண்டறிதல்களை ஆய்வு செய்து வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. டோமினோஸ் மற்றும் பீட்சா ஹட் நிறுவனங்கள் Reuters-ன் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

முண்டேவின் நடவடிக்கைகள் மும்பையின் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. 70 ஆண்டுகள் பழமையான ஐஸ்கிரீம் பார்லர் மற்றும் 110 ஆண்டுகள் பழமையான பார்சி டெய்ரி நிறுவனத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முண்டேவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சில உணவு வணிக நிறுவனங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமான கடுமையுடன் செயல்படுவதாகவும் சில நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

சில நிறுவனங்கள் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தையும் அணுகியுள்ளன.

ஒரு வழக்கில், உணவகத்தின் செயல்பாடுகள் விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட பின்னரும் அதன் உரிமத்தை தொடர்ந்து இடைநிறுத்தியதற்காக, முண்டே தலைமையிலான துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து முண்டே கூறுகையில், “நீதிமன்றத்திலிருந்து ஏதேனும் கருத்துகள் வந்தால், அதை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். முன்னேற்றத்துக்கான வாய்ப்பு இருந்தால், நாங்களும் முன்னேற்றம் செய்வோம்” என்றார்.

‘நான் பிரபலமானவன் அல்ல... உணவுப் பாதுகாப்பு ஆணையர் மட்டுமே!’

வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முண்டேவுக்கு வித்தியாசமான வரவேற்பு கிடைத்தது.

அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அவருடன் கைகுலுக்கவும் பலர் ஆர்வம் காட்டினர்.

அப்போது ரசிகர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி முண்டேவுக்கு தேசிய அளவில் ஒரு முக்கியப் பொறுப்பை வழங்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால், இந்தப் புகழை முண்டே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

“நான் ஒரு பிரபலம் என்று நினைக்கவில்லை. நான் ஒரு உணவுப் பாதுகாப்பு ஆணையர் மட்டுமே” என்று Reuters-க்கு அளித்த பேட்டியில் முண்டே தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bank Strike: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்! 4 நாட்கள் முடங்கும் வங்கி சேவை?
காதல் திருமணங்களுக்கு தடை விதித்த கிராமம்! பஞ்சாயத்து முடிவுக்கு கிளம்பும் எதிர்ப்பு.. எந்த ஊர்ல தெரியுமா?