தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் ரவி கண்ணன் என்பவர் ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் "ரமோன் மகசேசே" விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
"ரமோன் மகசேசே" விருது என்பது "ஆசியாவின் நோபல் பரிசு" என்று அழைக்கப்படுகிறது. இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் ஆசிய நாடுகளில் ஒருமைப்பாடு, துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தனிநபர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இந்தாண்டுக்கான (2023) 'ரமோன் மகசேசே' விருது தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதில் 4 பேருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வங்காளதேசத்தைச் சேர்ந்த கோர்வி ரக்ஷாந்த், திமோர்-லெஸ்டீயைச் சேர்ந்த யூஜெனியோ லெமோஸ், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மிரியம் கரோனல்-ஃபெரர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இந்த விருதுடன் சான்றிதழ், பதக்கம் மற்றும் அமெரிக்க டாலரில் 50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
இந்நிலையில், இந்த விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணன் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். மேலும் இவர் அசாம் மாநிலத்தில் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவராக கருதப்படுகிறார். இதற்கு முன்பாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இவர் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்தார்.