Exclusive | 'ராம் லல்லா' - என் வாழ்வின் அர்தத்தை உணர்ந்த தருணம்! - Idol Sculptor Arun Yogiraj

By Asianet Tamil  |  First Published Feb 12, 2024, 4:08 PM IST

அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயிலில் பிரான் பிரதிஷ்டா விழாவில் பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்த ராமர் சிலையை உருவாக்கிய 41 வயதான இளம் சிற்பி அருண் யோகிராஜ் உடன் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் சேர்மன் ராஜேஷ் கல்ராவின் பிரத்யேக நேர்காணல்.


ராஜேஷ் கல்ரா: யோகிராஜ் ஜி, உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முன் வந்ததற்கு மிக்க நன்றி. உங்கள் பணிகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை அளித்ததில் பெருமிதம் அடைகிறோம். உங்களை அருண் என்று அழைக்கலாமா? யோகி என்று அழைக்கலாமா? எது சரியாக இருக்கும்?

அருண் யோகிராஜ்: மக்கள் என்னை யோகிராஜ் என்றுதான் அழைப்பார்கள்.

Tap to resize

Latest Videos

ராஜேஷ்: சரி, நானும் யோகிராஜ் என்றே அழைக்கிறேன். அயோத்தியில் ராமர் சிலையை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிற்பிகளில் ஒருவராக நீங்கள் இருந்தீர்கள். அப்போது உங்களது மனநிலை எப்படி இருந்தது?

யோகிராஜ்: நாம் கடந்த 500 ஆண்டுகளாக இதற்காகக் காத்திருக்கிறோம். என் தந்தை கூட வாய்ப்பு கிடைத்தால் ராமர் கோயிலுக்கான சிலையை வடிக்க வேண்டும் என்று விரும்பினார். என் தாத்தாகூட அதையே விரும்பி இருந்தார். ஆனால் அவரது பேரனான நான் அதற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அது என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள். இந்த வாய்ப்பு கிடைத்தது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். நாங்கள் 250 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்துவருகிறோம். இறுதியில் இதன் மூலம் கடவுளின் ஆசியும் கிடைத்துள்ளது.

ராஜேஷ்: மூன்று சிற்பிகளில் ஒருவராகத் தேர்வாகி இருப்பதை அறிந்தவுடன் எப்படி உணர்ந்தீர்கள்?

யோகிராஜ்: எங்கள் மூவருக்கும் பெரிய பொறுப்பு இருந்தது. நாடு இதற்காக காத்திருந்தது. எங்களுக்கு முன்னோடிகள் உருவாக்கிய எந்த வடிவமும் முன்மாதிரியாக இல்லை. நாங்களேதான் இதை உருவாக்க வேண்டியிருந்தது. எங்களுக்குச் சில விவரங்களைச் சொன்னார்கள். 5 வயது சிறுவனின் தோற்றம், பாதத்தில் இருந்து நெற்றி வரை 51 இன்ச் உயரம் போன்ற தகவல்கள். இதைக் கொண்டு ஒரு சிலையை உருவாக்கி மக்கள் முன் வைப்பது எங்கள் பொறுப்பு. அதற்காக நாங்கள் பல முயற்சிகளைச் செய்தோம். நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முயன்றோம். 5 வயது சிறுவன் பற்றிய குறிப்புகள் நம்மிடம் உள்ளன. 5 வயது தோற்றதுக்கு உரிய அம்சங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ள முயன்றேன். 3 வயது, 9 வயதுக்கான தோற்றங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள முயற்சி செய்தேன். இதனிடையே 5 வயதுக்குரிய தோற்றம் பற்றி அறிந்துகொண்டேன். இப்படித்தான் பணியை ஆரம்பித்தேன்.

ராஜேஷ்: இந்தப் பணியைச் செய்வதில் பதற்றம் ஏற்பட்டதா?

யோகிராஜ்: முதல் இரண்டு மாதங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது. பிறகு பின்பக்கத்தில் சில கலை வேலைப்பாடுகளைச் செய்ய நினைத்தேன். அது உதவியாக இருந்தது. சிலையின் ஆயுள்காலத்தை நீட்டிக்கவும் உதவக்கூடியது. இதைச் செய்துவிட்டு சக சிற்பிகளுடன் அதைப்பற்றி உரையாடினேன். அதுவரை எனக்குத் தெரிந்ததை மட்டும்தான் செய்திருந்தேன். ஆனால், ராம் லல்லாவின் தோற்றம் பற்றி எனக்குத் தெரியாது. குழந்தைகள் பற்றியும், உடற்கூறுகள் பற்றியும் நான் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். சிற்ப சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்த்தேன். அதில் ‘உத்தம பஞ்சதாளம்’ என்ற பெயரில் ஐந்தரை வயது சிலைக்கான உடற்கூறியல் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. நான் அந்த அளவுகளை பயன்படுத்த முடிவு செய்தேன். சிற்பியின் கலைத்திறமை அதில்தான் இருக்கிறது. முதல் இரண்டு மாதங்கள் எதுவுமே தெரியாத நிலையில் இருந்தேன். ஆனால் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். கடுமையாக உழைத்தேன். 

ராஜேஷ்: உங்களுக்கு இருந்த இதுபோன்ற அழுத்தங்கள் உங்கள் பணியை பாதிக்காகமல் எப்படிக் கடந்து வந்தீர்கள்?

யோகிராஜ்: நான் என் பாரங்களை எல்லாம் ராம் லல்லா மீதே போட்டுவிட்டேன். நான் அவரிடம் கூறினேன். ‘நான் தயாராக இருக்கிறேன். நீதான் என் மூலம் இதைச் செய்து முடிக்க வேண்டும். நான் இந்தக் கல்லில் உன்னைக் காண விரும்புகிறேன். தயவுசெய்து எனக்கு உன் தரிசனத்தைக் கொடு’ என்று கேட்டேன். ராம் லல்லாவை முதலில் தரிசனம் செய்யப்போகும் பக்தன் நான்தான். எனக்கு இருந்த அழுத்தங்ஙளை எல்லாம் அவரிடம் விட்டுவிட்டேன். கல்லுடன் பேசிக்கொண்டே பணியைச் செய்தேன். இதை நான் என் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் நான் ஓரிரு மணிநேரம்தான் வேலை செய்வேன். அப்போது அவர், ‘நீ இன்னும் அதிக நேரம் பணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் கல் உன் பேச்சைக் கேட்க ஆரம்பிக்கும்’ என்று சொல்வார். நான் 11 வயதில் இந்த வேலையை ஆரம்பித்தேன். ஆனால், 20 வயதில்தான் அப்பா சொன்னதைப் புரிந்துகொண்டேன். கடந்த 20 ஆண்டுகளாக அதையே தொடர்ந்து செய்துவருகிறேன். நான் கற்களுடன் பேசத் தொடங்கினேன். அவை என் பேச்சைக் கேட்கின்றன என்று நம்புகிறேன். நான் நினைப்பதை என் கண் முன்னால் பார்க்க முடியும் என்றும் நம்புகிறேன். என் தந்தையின் வழிகாட்டலும் இந்தப் பணியில் எனக்கு இருக்கும் ஈடுபாடும் என்னைச் சரியான திசையில் வழிநடத்தியுள்ளன.

ராஜேஷ்: சிலையை வடிப்பதற்காக உங்களுடன் தேர்வு செய்யப்பட்ட மற்ற இருவர் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்ததா?

யோகிராஜ்: ஜி.எல். பட் அவர்களைப் பற்றித் தெரியும். அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்தான். ஆனால், சத்தியானந்த் பாண்டே அவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. நாங்கள் மூவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தோம். ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் சிலையைப் பற்றி எதுவும் ஆலோசிக்கக் கூடாது என்று முடிவு செய்தோம். ஏனென்றால் நாங்கள் தலைசிறந்த ஒன்றை நாட்டுக்குத் தர விரும்பினோம். வித்தியாசமான, தனித்துவமான, பன்முகத்தன்மையுடைய, அழகான சிற்பத்தைக் கொடுக்க நினைத்தோம். அதற்காக நாங்கள் மற்றவர்களின் சிலையைப் பார்க்கவோ, அதைப்பற்றி ஆலோசிக்கவோ வேண்டாம் என்று முடிவு எடுத்தோம். உலகில் மற்ற அனைத்தையும் பற்றி விவாதித்தோம். ஆனால், அதைப்பற்றிப் பேசவில்லை.

ராஜேஷ்: உங்கள் பணியைச் செய்யும் காரியசாலை எங்கே இருந்தது?

யோகிராஜ்: நாங்கள் மூவரும் ஒன்றாகவே இருப்போம். காலை, மதியம், இரவு என ஒன்றாகவே சாப்பிடுவோம். ஆனால், ஒவ்வொருவரின் காரியசாலையும் 500 மீ தூரத்தில் இருந்தது.

ராஜேஷ்: அப்படியானால், நீங்கள் ஒருபோதும் மற்றவர்கள் செய்திருப்பதைப் பார்க்கவே இல்லையா?

யோகிராஜ்: இல்லை. இல்லை. 7 மாதங்கள் கழிந்த பிறகுதான் மற்றவர்கள் செய்த சிலையைப் பார்க்கும் வாய்ப்பு முதல் முறையாகக் கிடைத்தது.

ராஜேஷ்: நீங்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உங்கள் தினசரி வாழ்க்கை எப்படி இருந்தது?

யோகிராஜ்: நான் தினமும் ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி செய்வது வழக்கம்.  குறைந்தது முக்கால் மணி நேரமோ ஒரு மணி நேரமோ கட்டாயமாக உடற்பயிற்சி செய்யவேன். இதை சென்ற 25 வருடங்களாகவே செய்துகொண்டிருக்கிறேன். நான் உடற்பயிற்சி செய்யும் இடத்தில் யோகா கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. முதல் 3 மாதங்கள் நான் அங்கே யோகா கற்றுக்கொண்டேன். அதற்குப் பிறகு பூஜை செய்வேன். பிறகு தினமும் குறைந்தது 12 மணிநேரம் சிலைக்காகவே செலவிடுவேன். 25 வருடங்களாகவே நாள்தோறும் 10-12 மணிநேரம் பணியில் இருக்கவேண்டும் என்பதை நிபந்தனையாக வைத்துக்கொண்டிருக்கிறேன். நேரம் கிடைத்தால் மாலையிலும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வேன்.

ராஜேஷ்: 51 இன்ச் உயரம், 5 வயது சிறுவனின் தோற்றம் போன்ற விவரங்களை உங்களிடம் சொன்னபோது, அவற்றில் எது உங்களுக்குச் சவாலாக இருந்தது?

யோகிராஜ்: மிகப்பெரிய சவாலாக இருந்தது, 5 வயது சிறுவனை உருவாக்க வேண்டும், அந்தச் சிறுவனில் ராம் லல்லாவின் அம்சத்தையும் கொண்டுவர வேண்டும் என்பதுதான். 5 வயதுப் பையனின் முகத்தில் ராமர் தெரியவேண்டும். அது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த 10x7 இன்ச் அளவுக்குள் முகத்தைச் செதுக்குவதுதான் மிகவும் சவாலான பகுதியாக இருந்தது.

ராஜேஷ்: ராமரிடம் நீதான் என் தெய்வம், நீயே எனக்கு வழிகாட்டு எனக் கேட்டதாகச் சொன்னீர்கள். இந்த ராமர் சிலையை செய்வதற்காக பிரத்யேகமாக என்ன செய்தீர்கள்?

யோகிராஜ்: சிற்ப சாஸ்திரத்தின்படி காலையிலும் மாலையிலும் பூஜை செய்ய வேண்டும். கையில் ஒரு கங்கணம் கட்டப்படும். அதாவது, இந்தச் சிலையை முடிக்கும் வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. அதனால் நான் கடந்த 9 மாதங்களாக எனக்கு வந்த மற்ற கமர்சியல் ஆர்டர்களை விட்டுவிட்டேன். ஒரு ஆர்டரைக்கூட ஏற்கவில்லை. சிலைக்கும் எனக்கும் உள்ள பிணைப்பைக் கைவிடவில்லை. இதற்காகத்தான் கடந்த ஐநூறு ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம். எனவே, இதற்காக நூறு சதவீதத்திற்கும் அதிகமான உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அனைத்தையும் சிலைக்குள் கொண்டுவர முயன்றோம். சிற்ப சாஸ்திர அளவுகள், உடற்கூறியல் அளவுகள் என அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும், அது நாடு முழுவதிலும் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். ஆனால் தென்னிந்திய பாணியில் சிலையை வடிக்க நான் விரும்பவில்லை. இந்தியா முழுவதும் உள்ள அழகான அம்சங்களை எடுத்துக்கொண்டேன். இந்த வேலையை ஆரம்பிக்கும் முன் தினமும் ஆயிரம் படங்களைப் பார்ப்பேன். அப்போது நாளை நான் என்ன செய்யவேண்டும் என்று யோசித்துப் பார்த்து என்னைத் தயார்படுத்திக் கொள்வேன். ஒவ்வொரு இன்ச்சிலும் சிறப்பான சிலையை நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஒவ்வொரு நொடியும் ராம் லல்லாவின் பெயரையே எனக்குள்  சொல்லிக்கொள்வேன்.

ராஜேஷ்: இந்தச் சிலையைச் செய்வதற்காக பிரத்யேகமான கருவிகளை எதையாவது பயன்படுத்தியிருக்கிறீர்களா?

யோகிராஜ்: இங்கே இருக்கும் கற்கள் மிகவும் இறுக்கமானது. எனவே முதலில் அவற்றை வெட்டி எடுப்பதற்கு மிஷனை பயன்படுத்தினோம். ஆனால், அதை வைத்தே முழு சிலையையும் முடிக்க விரும்பவில்லை. கையால் செய்த சிலையையே அளிக்க விரும்பினோம். அதுதான் உணர்வுபூர்வமானதாக இருக்கும். கல்லின் இறுக்கமான தன்மை காரணமாக முதல் 50 சதவீத வேலைக்கு இயந்திரத்தின் உதவியை பயன்படுத்திக்கொண்டோம். மீதி 50 சதவீதம் முழுக்க கைகளாலேயே செதுக்கியிருக்கிறோம். உறுதியாக கற்களை செதுக்குவதற்கு பயன்படும் கார்பைட் பிட் டூல் என்ற கருவியை பயன்படுத்தினோம். எல்லாமே கைகளால் முழுமை செய்யப்பட்டதுதான். உப்புத்தாளை பயன்படுத்தினோம். தேங்காய் எண்ணெய் மூலம்தான் பாலிஷ் செய்திருக்கிறோம். எந்த ரயாசனப் பொருளும் பயன்படுத்தவில்லை. சிலைக்கு வண்ணம் சேர்ப்பதற்கோ வேறு தேவைக்கோ எந்தவொரு கெமிக்கலும் பயப்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க இயற்கைப் பொருட்களை பயன்படுத்தியே சிலை உருவாக்கப்பட்டது.

ராஜேஷ்: கமிட்டியிலிருந்து யார் யார் உங்களை தொடர்ச்சியாக தொடர்புகொண்டிருந்தனர்..?

யோகிராஜ்: கமிட்டியிலிருந்து சம்பா ஜி தொடர்ச்சியாக எங்களுடன் தொடர்பு கொள்வார். எங்களுடன் பேசி எங்கள் குறை நிறைகளை பூர்த்தி செய்வார். மற்றும், நிருபேந்திரா ஜியும் வருவார். சிலை பணிகளை பார்வையிடுவார். இறுதி பணிகளை கேட்டறிவார். எங்களுக்கும் சிலை ஆரம்பிக்கும்போது, அது எப்படி உருப்பெரும் என எங்களுக்கும் தெரியாது. இருவரும் அனைத்து சிறபக் கலைஞர்களுக்கும் போதுமான நேரம், ஊக்கம் கொடுத்து பணிக்கு அமர்த்தினார். நாங்களும் மிகப் பெரிய பணியை இயல்பாகவே செய்துமுடித்தோம். அங்கு 3 ஸ்டூடியோக்கள் இருந்தன. ஒரு ஸ்டூடியோவுக்கு சென்றால் எங்களுக்குள் ஒரு தயக்கம் ஏற்படும். எனவே நாங்கள் மூவரும் இணைந்து அவர்களை அழைப்போம். என்ன மாதிரியான மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கேட்டறிவோம். மற்ற கமிட்டி உறுப்பினர்களும் எங்களை சிறப்பான முறையில் கவனித்துக்கொண்டார்கள். ஒரே பணியை 3 பேர் செய்யும் போது மிகவும் சவாலானது. ஆனாலும் நாங்கள் மகிழ்ச்சியாக செய்து முடித்தோம். 


ராஜேஷ்:இப்பணி செய்கையில் தனிப்பட்ட முறையில் நீங்கள் என்ன மாதிரியான சங்கடங்களை உணர்ந்தீர்கள்?


யோகிராஜ்: இப்பணிக்காக ஏப்ரல் மாதம் தேர்வு செய்யப்பட்டேன். ஜூனில் என் பணிகளை தொடங்கினேன். பல்வேறு விதிமுறைகள் கொடுக்கப்பட்டது. அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு 70% சிற்ப பணிகளை முடித்துவிட்டேன். திடீரென ஒரு நாள் டெல்லிக்கு அழைத்தார் நிருபேந்தி மிஸ்ரா. சிலைக்கு பயன்படுத்தப்பட்ட கல் ஒரு டெஸ்டில் நெகட்டிவ் ஆகியுள்ளது. குறிப்பாக சிலை செய்யப்படும் கல் சுமார் 8 டெஸ்ட்கள் செய்யப்படும். எனவே, வேறு ஒரு கல்லில் மீண்டும் சிலை வடிக்க கூறினர். 

ராஜேஷ்: ஜூனில் ஆரம்பித்த பணிகள் ஆகஸ்ட் வரை நடைபெற்று வந்த நிலையில் இந்த டெஸ்ட நெகட்டிவ் குறித்த உங்களிடம் தெரிவிக்கப்பட்டதா? பின்னர், மீண்டும் வேறு ஒரு சிலையை வடித்தீர்களா? இது உங்களுக்கு டென்சன் அல்லது மன அழுத்தத்தை ஏற்படுத்தவில்லையா?

யோகிராஜ்: வேறு ஒரு சிலை மீண்டும் செய்யக் கூறினர். அதற்கான தெளிவான விளக்கத்தையும் அளித்தனர். நான் ஒன்றும் போட்டியில் பங்கு பெறவில்லை. இது ஒரு வாய்ப்பு. தவறவிடக்கூடாது என்று நினைத்தேன். என்னால் முடியும் என்றும் நினைத்தேன். என் தாத்தா, தந்தை வழி முறையாக நானும் சிலை வடிப்பதால், விரைவாக செய்ய முடியும் என்று கருதினேன். மற்ற சிற்பக் கலைஞர்களை விட நான் வேகமாக செய்பவன். ஆனால், இங்கு எனக்கும் முன்னாள் இரு கலைஞர்கள் சிற்பம் செய்து கொண்டிருந்தனர். எனக்குள் ஒரு சிறு பதற்றம் தொற்றிக் கொண்டது. சம்பா ஜியும், நிருபேந்திர மிஸ்ரா அவர்களும் தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்கி என்னை தேற்றினர். இல்லாவிடில் நானும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பேன்.

சொல்லுங்க...


ராஜேஷ்: எல்லோரும் 8 மாதங்களில் செய்து முடிக்கும் பணியை நீங்கள் 3.5 மாதத்தில் செய்து முடித்துள்ளீர்கள். நீங்கள் அதிக நேரம் உழைத்து இப்பணியை முடித்தீர்களா..? அல்லது எப்போதும் போல பணி செய்து இதை முடித்தீர்களா?

யோகிராஜ்: நான் இப் பணியை செய்து முடிக்க 4 மணி நேரம் அதிகம் உழைத்தேன். இயல்பாகவே நான் 12 மணிநேரம் பணி செய்வேன். இப்பணியை செய்து முடிக்க கூடுதல் நேரம் தேவைப்பட்டது. 4 மணிநேரம் கூடுதலாக பணி செய்தேன். என் முழு உடல் உழைப்பையும் இதற்காக செலவழித்துள்ளேன். இந்த என் வாழ்நாள் வாய்ப்பை நான் வீண்டிக்க விரும்பவில்லை. தூக்கத்திலும் பணி செய்வதாகவே உணர்ந்தேன். நாளை என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும். 2வது முறை செய்யும் போது அயோத்தியா குறித்து அதிகம் அறிந்துகொண்டேன். அப்போது முதல் சிலையை விட 2வது சிலை செய்வதற்கு மேலும் உதவியது. 

ராஜேஷ்; இந்த (உங்கள்) சிலைதான் பிரான் பிரதிஷ்டா செய்யப்பட உள்ளது என்ற தகவல் எப்போது உங்களுக்கு தெரிவிக்கப்பட்டது? அந்த தருணம் எப்படி இருந்தது? 

யோகிராஜ்: டிசம்பர் 28ம் தேதி எனக்கு அழைப்பு வந்தது. உங்கள் சிலை படைப்பை நீங்கள் கமிட்டி குழுவினரிடம் காட்சிப்படுத்த வேண்டும் என்று. அந்த தேதிக்கு நான் அயோத்தி சென்று சிலையை ஒரு மஞ்சள் துணியால் மறைத்திருந்தேன். எனக்கு தெரி்ந்த ஆங்கிலத்தில் அவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தேன். அப்போது, சிலையை மறைத்திருந்த துணியை நான் விலக்கிய போது, கமிட்டி குழுவினர் கையெடுத்து கும்பிட ஆரம்பித்து விட்டனர். நான் சொல்ல நினைத்ததை தெய்வீக சிலை அனைவருக்கும் உணர்த்திவிட்டது. 

அன்று இரவு எனக்கு மீண்டும் அழைப்பு வந்தது. டிசம்பர் 30ம் தேதி நான் மைசூருக்கு திரும்ப டிக்கெட் புக் செய்திருந்தேன். எனக்கு வந்த அழைப்பில் உங்கள் பயணத்தை ஒத்திவையுங்கள் என்றனர். 

ராஜேஷ்: மற்றவர்களுக்கும் இந்த மாதிரி அழைப்பு வந்ததா?

யோகிராஜ்: இல்லை.

ராஜேஷ்: ஆகவே உங்கள் சிலை தேர்தெடுக்கப்பட்டதாக உணர்ந்தீர்களா?

யோகிராஜ்: ஆம், ஆனால் உறுதியாக தெரியாது. அவர்களும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அவர்கள் இங்கு இருங்கள் என்று மட்டுமே கூறினர். 

ராஜேஷ்: உங்கள் சிலைதான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது? 

யோகிராஜ்: ஜனவரி 8ம் தேதி இருக்கும் என நினைக்கிறேன். சிலைக்கான ஆடை வடிவமைப்பு. நகை அலங்காரம் போன்றவற்றிற்கான கால நேரத்தை அடுத்து என்னிடம் அறிவிக்கப்பட்டது. எனக்கு தெரிந்தவுடன் எனக்கு ஒருவித பயம் தொற்றிக்கொண்டது. 3ல் ஒருவனாக நான் தேர்வு செய்யப்பட்டவுடன் என் சிலை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பிரதிஷ்டை செய்யப்பட வே்ண்டும் என்ற நினைப்பு மட்டுமே இருந்தது. அதன் பின்னர் சிலையை தொடவே எனக்கு தயக்கம் ஏற்பட்டு விட்டது. என் கைகள் எல்லாம் நடுக்கம் கொண்டது. பொதுவாக உளியை கொண்டு விரைவாக செதுக்குபவன். ஆனால், சிலை தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அதை தொட்டு தூக்கவே சிறிது தயக்கம் ஏற்பட்டது. 


ராஜேஷ்: உங்கள் சிலை தேர்ந்தெடுக்கப்படவுடன் மற்ற இருவர் என்ன நினைத்தார்கள்?

யோகிராஜ்: நாங்கள் ஸ்போர்டிவாக எடுத்துக்கொண்டோம். 3 பேரும் ஒன்றில் உறுதியாக இருந்தோம். சிறந்த ஒன்று நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். எனது சிலை தான் சிறந்தது என யாரும் நினைக்கவில்லை. என் சிலை தேர்ந்தெடுக்கப்பட்டதும், இருவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஒருவேளை மற்ற ஒரு சிலை தேர்தெடுக்கப்பட்டிருந்தாலும் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இப்போது சிலை மேலும் அழகாக தெரிகிறது. 


ராஜேஷ்: ஒருவேளை 3 சிலைகளில் ஒரு சிலையை தேர்தெடுக்க கூறினால்... நீங்கள் எந்த சிலையை தேர்வு செய்திருப்பீர்கள்?

யோகிராஜ்: என் சிலையைதான் தேர்ந்தெடுத்து இருப்பேன். நாங்கள் மூவரும் சிலைகள் செய்து கொண்டிருந்த போது, கமிட்டி குழுவினர் அவ்வப்போது வந்து பார்வையிட்டு செல்வர். இறுதி கட்டத்தின் போது எந்த சிலை நன்றாக உள்ளது என கேட்பேன். அப்போது அவர்கள் கூறுவர், 3 சிலைகளும் சிறப்பாக உள்ளது. உங்கள் சிலையில் ஓர் உயிரோட்டம் தெரிகிறது என்றனர். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 

ராஜேஷ்: இந்த பிரான் பிரதிஷ்டாவுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை முறை எவ்வாறு மாறியுள்ளது?

யோகிராஜ்: இதற்கு முன்பே நான் இரு முக்கிய சிலைகளை தேசத்திற்காக செதுக்கியுள்ளேன். டெல்லியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலை மற்றொன்று கேதர்நாத் ஆதிசங்கராசார்யா. நான் என் இயல்பான பணிகளை செய்துள்ளேன். ராம் லாலா சிலை நாடு கடந்து அனைவரையும் சென்றடைந்துள்ளது. நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ராம்லாலா மீதான அன்பே அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளது. 

ராஜேஷ்: உங்கள் செயல்பாடும், பேச்சும் மிகுந்த தன்மையானவர் என்பதைக் காட்டுகிறது. இப்பணியில் முதலில் 10 பேர், பின்னர் 3 என்று தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து உங்கள் சிலை செய்யும் பணியில் மாற்றம் கொண்டு வந்துள்ளதா? 

யோகிராஜ்: ஆம், ஒரு கலைஞராக எனது முந்தைய பணிகளைவிட அடுத்த பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே நோக்கம். எனது அடுத்த கட்ட பணிகள் மிகவும் தேர்வான ஒன்றாக உள்ளது. தேசத்திற்காக பணி செய்ய விரும்புகிறேன். அதன் பின்னர் என் தனிப்பட்ட சிலைப் பணிகளை மேற்கொள்கிறேன். 

ராஜேஷ்: ஒருவேளை நீங்கள் சிற்பியாக இல்லாமல் இருந்திருந்தால் என்னவாகியிருப்பீர்கள்.

யோகிராஜ்: விவசாயி. இதுவே என் ஆசை. எனக்கு கிடைக்கும் சிறிய நேரங்களில் கூட வேளாண் தொழிகளில் ஈடுபடுவேன் 

ராஜேஷ்: ஃபிட்னஸ் கூட உங்கள் ஆர்வம் என குறிப்பிட்டிருந்தீர்கள். அது ஒரு குறிப்பட்ட நபரைப்போல் இருக்க விரும்புகிறீர்களா? அல்லது நீங்களாகவே ஃபிட்டாக இருக்க நினைக்கிறீர்களா?

யோகிராஜ்: நான் ஒரு தொழில்முறை கைப்பந்து விளையாட்டு வீரர். 2000வது ஆண்டில் கைபந்து விளையாடினேன். 

ராஜேஷ்: ஃபுரபஷனல் பிளேயர் என்றால்.. எப்படி? எதாவது லீக் சுற்றில்  அல்லது பல்கலைகழக போட்டிகளில் விளையாடி உள்ளீர்களா?

யோகிராஜ்: நான் தேசிய அளவிலாள கைப்பந்து போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். கர்நாடகா  மாநிலம் சார்பில் நான் இருந்தேன். 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் ஜூனியர் அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன். பின்னர், மைசூரு பல்கலை அணிக்கான போட்டிகளில் பங்கேற்றேன். எனக்காக தினமும் ஒரு மணிநேரம் ஃபிட்னஸ்காக செலவிடுகிறேன். மேலும் ஓடும் வழக்கத்தையும்  பழக்கமாக கொண்டுள்ளேன். 5.5 விநாடிகளில் ஒரு கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளேன்.  ஆகவே, இப்போது கூறுவேன் நான் ஃபிட்டாக இருக்கிறேன் என்று. 


ராஜேஷ்: உங்கள் பணிகளோடு.. குடும்பத்தினர் எவ்வாறு உறுதுணையாக உள்ளனர். உங்கள் மனைவி, அம்மா மற்றும் குழந்தைகள்...

யோகிராஜ்: இந்த குடும்பத்தில் பிறந்ததை பெருமையாக நினைக்கிறேன். என் முன்னோர்களின் ஆசிர்வாதத்தால் இந்த வாய்ப்பை பெற்றதாக கருதுகிறேன். இந்த நேரத்தில் என் தந்தைக்கு நன்றி கூற கடமைப்பட்டுளேன். என் தந்தை தான் எனக்கு குரு மற்றும் எல்லாமே. அவர் எனக்கு இதை செய், அதை செய் என கூறியது கிடையாது.  அவர் எந்த வேலை செய்யும் போதும் உதவிக்கு என்னை அழைத்தது கிடையாது.  2010ல் MBA முடித்த நான் சிற்பியாகப் போகிறேன் என தந்தையிடம் கூறினேன். அவர் ஒன்றே ஒன்றுதான் கூறினார். நீ MBA முடித்திருக்கிறாய், சிற்பத் தொழில் ஒன்றும் மார்க்கெட்டிக் கிடையாது. எங்களின் பெயரை கெடுத்துவிடாதே என்றார். 

ராஜேஷ்: இந்த சிலை சிற்ப பணிகளின் போது உங்கள் தந்தையின் அறிவுரைகள் உங்களுக்கு எப்படி இருந்தது?

யோகிராஜ்: முதலில் ஆதிசங்கராசார்யா சிலை செய்தவுடன் இதுதான் மிக்பெரிய பணி என நினைத்தேன். பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை செய்யம் பணி கிடைத்தது. அதை முடித்தவுடன் அது தான் பெரிது என நினைத்தேன். பின்னர் ராம் லல்லா சிலை பணி செய்ய கிடைத்தது. இவை எல்லாம் என் தந்தையின் ஆசிர்வாதம் என கருதுகிறேன். நான் செய்யும் ஒவ்வொரு பணியையும் என் தந்தை கண்டு கொண்டிருக்கிறார். ராம்லல்லா சிலை முடித்தவுடன். நான் என் தந்தையிடம் வேண்டிக்கொண்டேன். அனைத்திலும் அவரது வழிகாட்டல் வேண்டும் என்றே முறையிட்டேன்.  என் தாயும், மனைவியும் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்கள். என் ஒன்றரை வயது குழந்தையை நீண்ட நாட்கள் பார்க்காமல் இருந்தேன். அயோத்தியில் இருந்ததால் பார்க்க முடியவில்லை. அவர்கள் என்னை தேற்றி நிம்மதியாக பணி செய்ய அனுமதித்தனர். கடந்த 10 ஆண்டுகளில் நெடுநேரம் நான் கற்களுடனேயே செலவழித்து வருகிறேன். என் மனைவி விஜேதா, எனது 8 வயது பெண் குழந்தை பெயர் சமி. அவர்கள் எனக்கு மிக பக்கபலமாக இருக்கிறார்கள். 

இக்காலகட்டத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. என் மகள் என்னை தன் நடன நிகழ்ச்சியை காண அழைத்திருந்தார். நானும் முறையான அனுமதி பெற்று வந்து மகளின் நிகழ்ச்சியை கண்டேன். அவர்களின் தியாகத்திற்கு நடுவே, இது ஒரு சிறிய தியாகம் என நினைக்கிறேன். 

ராஜேஷ்: பல்வேறு தடைகளை கடந்து மிகச் சிறப்பான பணிகளை செய்து வருகிறீர்கள். பிரான் பிரதிஷ்டைக்குப் பிறகு ராம் லல்லா சிலை மேலும் உயிர்பெற்றுள்ளது. அனைவரின் இதயங்களிலும் வாழ்கிறதான ஓர் உணர்வு. 

எனக்கும் அந்த உணர்வு உண்டு. 

எங்களுக்காக மிகச் சிறப்பான பணியை செய்துள்ளீகள். எங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி. 

Written By TG Dinesh and Srinivasa Gopalan

click me!