பீகார் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஜனவரி இறுதியில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பாஜக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி பீகார் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது. பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் 9ஆவது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றார்.
அதன் தொடர்ச்சியாக, பீகார் மாநில சட்டப்பேரவையில் நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பீகார் மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது. 129 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக, பீகார் சட்டப்பேரவை சபாநாயகரை நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 125 உறுப்பினர்கள் ஆதரவாகவும். 112 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் அத்வா பிஹாரி சௌத்ரி நீக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, பீகார் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.
பீகார் சட்டமன்றம், மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்டது. பெரும்பான்மை பெற 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அம்மாநில சட்டப்பேரவையில், பாஜகவுக்கு 78 இடங்களும், ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 45 இடங்களும் உள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 79, காங்கிரஸுக்கு 19, இடது முன்னணிக்கு 16 இடங்களும் உள்ளன.
ஆளுநர் ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை: திருமாவளவன் வலியுறுத்தல்!
முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்தார். “பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை ஒரு தந்தை என்ற முறையில் தசரதனாக நான் பார்க்கிறேன். தசரதன் தான் தனது மகன் ராமனை காட்டுக்கு அனுப்பினார். தற்பொழுது நிதிஷ்குமார் தசரதனாக இருப்பதற்கான நெருக்கடி அவருக்கு ஏற்பட்டுள்ளது. நிதீஷ் குமார் என்னை மட்டும் காட்டுக்கு அனுப்பவில்லை. ஒட்டுமொத்த பீகார் மக்களின் உணர்வுகளையும் அவர் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்.” என நிதிஷ்குமார் தெரிவித்தார்.
மேலும், “மோடியின் வாக்குறுதி பற்றி பேசுபவர்களே, இந்த பல்டே ( பச்சோந்தி என குறிப்பிடும் வகையில் பாஜகவினர் நிதிஷ்குமாருக்கு வைத்த பெயர்) இன்னொரு முறை கட்சி மாற மாட்டார் என மோடி ஜியால் உறுதி கூற முடியுமா?” எனவும் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பினார்.